Thursday 31 January 2013

நேற்று குங்குமம் வார இதழில் ஒற்றைத் தோடு என்ற ஒரு சிறு கதையைப் படித்தேன்.மாத்தளை சோமு என்பவரின் கதை.இலங்கைத் தமிழரின்,ஒரு சிறுமியின் அவல நிலை அந்தக் கதையின் முடிவு.படித்து முடித்தவுடன் அது போல் ஒரு சிறுமி நம்மைத் தேடி வந்தால் நாம் ஆதரிக்கலாமே என்று ஒரு கணம் அனுதாபப் பட்டேன்.அது கதை தானே என்று விட்டுவிட்டேன்.ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இலங்கையில் நடக்கிறது போலும் என்று வருத்தமாக இருந்தது:மனதில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தியது.ஆனால் இன்று குமுதத்திலும் அதே கதை வெளியாகி இருந்தது.கதை ஆசிரியர் காசு பார்க்கி ராரோ?இதழ்கள் இப்படி எல்லாம் கவனக் குறைவாக செயல் படுமா என்றெல்லாம் எனக்கு ஆச்சரியமாகப் படுகிறது.

Wednesday 30 January 2013

இப்பொழுது இருக்கும் இளம் பருவத்தினருக்கு நடைப் பயிற்சி என்பதே இல்லாமற் போய் விட்டது எனலாம்.எதற்கும் வண்டிதான்.போதாக் குறைக்கு பள்ளிப் பருவத்திலேயே விலையில்லா சைக்கிள் வேறு.நான் பள்ளி,கல்லூரிக்குச் செல்லும் பொழுதெல்லாம் நடைப் பயணம் தான்.ஒரு விதத்தில் நன்மை என்றாலும் கால விரயம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.ஆனால் வசதிக்கேற்ப இக்காலத்தினருக்கு அலட்சியம்,பயமின்மை வந்துவிட்டிருக்கிறது.தற்பொழுதும் கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகள் வெகு தூரத் திலி ருந்து நடந்து வருவதைப் பார்க்க முடிகிறது.இந்த முரண்பாடுகள் அவரவர் வீட்டுச் சூழலைப் பொறுத்துத் தான் அமைகிறது.ஏனென்றால் குடும்ப வறுமை,பெற்றோரின் பொறுப்பின்மை இவையும் அறியாமையும் கூட காரணம் எனலாம்.நான் பணியாற்றிய பள்ளி பெரும்பாலும் வறுமை,அறியாமை ஆகிய சூழலில் பயில வரும் பெண்பிள்ளைகள் நிறைந்த பள்ளி.6ஆம் வகுப்பில் படித்தசிறுமியின் பெற்றோர் அவளுக்குப் பிடிக்காத சூழ்நிலை கொண்ட உறவினர் வீட்டில் தங்கவிட்டு வேறு ஊருக்கு தொழில் புரியச் சென்றுவிட்டனர்.அந்தப் பெண் வகுப்பில் இருக்கும் பொழுதெல்லாம் தனக்குப் பேய் பிடித்திருப் பதாக வகுப்பு ஆசிரியையை பயமுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறாள் அவரும் எங்களிடம் ஆசிரியர் அறையில் வந்து கூறிக் கொண்டிருப்பார்.மேல்நிலை வகுப்புக்கு மட்டுமே செல்லக் கூடிய ஆசிரியர்களாகிய நாங்கள் அவளை அழைத்து எதுவுமே காட்டிக்கொள்ளாமல் இன்று மதியம் என்ன பாடம் உன் ஆசிரியை நடத்து கிறாரோ அதை எங்களிடம் வந்து சொல்கிறாயா என்று அன்புடன் கூறினோம்.அன்றிலிருந்து அவளது மனநிலையும் மாறியது.பிறகு ஒரு முறை அவளின் பெற்றோரை அழைத்து அவரது வகுப்பாசிரியர் அறிவுரை கூறி அனுப்பினார்.இது போன்று உளவியல் ரீதியாக மாணவிகளை அணுகிய அனுபவம் நிறைய உண்டு..

Tuesday 29 January 2013

நேற்று ஒரு வார இதழில் வடமாநில த் தொழிலாளர்களின் கூலி மற்றும் இதர வசதிகள் குறித்து கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.அடிப்படைத் தேவைகளுக்காக தம் இருப்பிடம் மற்றும் உறவுகளை விட்டு இங்கு வந்து உழைக்கின்ற அவர்களின் வாழ்வுப் பொருளா தாரத்தை வேலை வாங்குபவர்களும் வேலைக்கு அழைத்து வருபவர்களும் ஏன் இப்படி நசுக்குகிறார்கள் என்பது மிக்க வேதனையை அளிக்கிறது.இந்த அரசும் இதற்கென ஒரு தனித் துறையை ஏற்படுத்தக் கூடாதா என மனம் ஏங்குகிறது.நானும் என் கணவரும் கடந்த 2011ஆகஸ்டில் ராஞ்சி சென்றோம்.அப்பொழுது எங்கள் ரயில் பெட்டியில் இரு தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.25வயதிற்குள் தான் இருக்கும்.அதில் ஒருபையன் ஆந்திரா எல்லையில் ஏறப்போகும் ஒருவரின் பெர்த்தில் படுத்து வந்தானோ என்னமோ தெரியவில்லை.2மணி அளவில் t.t.r.ன் சத்தம்.கண் முழித்து என்னவென்று பார்த்தால் அந்த வட மாநிலபையனின் பெட்டிகளை ரயில் பெட்டியின் ஒரு மூலையில் எறிந்து அவனை அந்த T.T.R.அவ்வளவு திட்டு.பாவம் அந்த பையன்.விடிந்ததும் நான் எனக்கு தெரிந்த,அவனுக்குப் புரியும் ஆங்கிலத்தில் ஏன் reserve செய்யாமல் ஏறினாயா எனக் கேட்டேன்.அவன் தன் டிக்கெட் டைக் காண்பித்து reserve செய்திருக்கிறேன் பாருங்கள் என்று காண்பிக்க வந்தான்.அதைப் பார்த்து நான் என்ன செய்ய முடியும் என்பதனால் பேசாமல் இருந்து விட்டேன்.T.T.R.டம் போய் கேட்க துணிவு மற்றும் ஹிந்தி பேச வேண்டுமே?என்ன செய்வது?இது போன்ற அநியாயங்களைக் கண்டு மனம் வருந்த மட்டுமே முடிகிறது.

Thursday 24 January 2013

நேற்று பக்கத்து வீட்டு 3ஆம் வகுப்பு படிக்கும் பெண் பள்ளி வாகனத்திலிருந்து வீட்டு வாசலில் வந்து இறங்கினாள் என் எண்ணங்கள் என் பிள்ளைகளின் பள்ளிப் பருவத்தை நோக்கி சென்றது.4ஆம் வகுப்பு படிக்கும் என் பெண் u k g படிக்கும் என் பையனை மிகப் பொறுப்புடன் அழைத்து வருவது மட்டுமல்லாமல் நாங்கள் கணவன்,மனைவி இருவரும் அலுவலகத்திலிருந்து வரும்வரை பொறுமையுடன் பார்த்துக் கொள்வதும் எங்களுக்கு பெண்ணின் மீதான நம்பிக்கையை வலுப் படித்தி யது.காலம் என்ன மாற்றங்களை செய்கிற து



என் பையன் எல்.கே.ஜி.பெண் 3ஆம் வகுப்பு படிக்கும் பொழுதி லிருந்தே இருவரும் ஒற்றுமையுடன் சென்று வருவார்கள்.பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.எனவே தம்பியை மிகப் பொறுப்புடன் என் பெண் கவனித்துக் கொண்டாள்.அததுடன் இயல்பாகவே பொறுமை யானவளும் கூட.இருவரும் சேர்ந்தே ஹிந்தி வகுப்பிற்கும் செல்வர்.ஒருநாள் கூட பையனை பார்த்துக் கொண்டதில் அவள் சலித்துக் கொண்டதே இல்லை,அவனைப்பற்றிக் குறை கூறியதாகவும் நினைவில்லை.காலப் போக்கில் என் பையனுக்கு அவளை சார்ந்திருக்கும் நிலை பிடிக்கவில்லை போலும்.அல்லது ஆண்பிள்ளைக்கே உரிய சுபாவமோ அவன் 8ஆம் வகுப்பு படிக்கும் பொழுது அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பித்து விட்டது.என் பெண்ணும் தன் 7ஆம் வகுப்பு முதல் cycle ல் செல்ல ஆரம்பித்தாள்.அதுவும் ஒரு காரணம்.பையன் தன் படிப்பு தொடர்பாகக்கூட என் பெண்ணை சந்தேகம் கேட்கமாட்டான்.தனித்து நிற்க வேண்டும் என்ற அவனின் எண்ணம்தான் காரணமோ என்னமோ?சிறு வயது முதல் பொருட்களை பாதுகாக்கும் கவனம் என் பெண்ணுக்கு இருக்கும் அளவு பையனுக்கு இருந்ததில்லை .ஆனால் தற்சார்பு நிலை அவனுக்கு அதிகம் வந்தது தான் எனக்குஆச்சரியம்.

Tuesday 22 January 2013

இன்றைய செய்தித்தாளில் பயிற்சி ஆசிரியர்களிடம் நன்கொடை கட்டாய வசூல் குறித்து படிக்க நேர்ந்தது.ஒரு பிரியம்,நன்றி இவற்றின் காரணமாகத்தான் பயிற்சி ஆசிரியர்கள் ,வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ,தலைமை ஆசிரியர்களுக்கும் பொருட்களை தந்து விடை பெறுகின்றனர் .நான் 1982ஆம் வருடம் ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 30நாட்கள் பயிற்சி எடுத்தேன்.முடிந்து என் கணவரின் பணி மாற்றல் காரணமாக சாத்தூர் செல்ல வேண்டி தலைமையாசிரியரிடம் சொல்லிக்கொள்ள சென்ற என்னிடம் ஒரு மூட்டை மிளகாய் கேட்கிறார் .நான் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டேன்.ஆனால் நான் பணி புரிந்த பொழுது என்னிடம் பயிற்சி பெற வந்த ஆசிரியர்கள் நான் விரும்பாமலே ஒருசில பொருட்களை தந்து சென்றனர்.காலப்போக்கில் கடுமையாக மறுக்க வேண்டி வந்தது.பிறிதொரு ஆசிரியைக்கு ஒரு பயிற்சி ஆசிரியர் வெளிநாட்டு கெட்டில் என்று பொருளைக்கொடுத்தார்.அவர் வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு எடுத்துச்சென்றார்.அது வேலை செய்யவில்லை .மிக்க அவமானத்துடன் மீண்டும் பள்ளிக்கே கொண்டுவந்து கொடுத்தவரை தேடிப்பிடித்து எடுத்துப் போகசசொல்லி கெஞ்சினார் அது பலநாட்கள் பள்ளியில் கிடந்தது.கேட்டுப்பெறுகிற மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்களும் உண்டு பயிற்சிக்கு வராமலே பணம் கொடுத்து கையொப்பம் பெறுபவர்களும் உண்டு.அநியாயம் .

Monday 21 January 2013

நான் தமிழில் முது கலைப்பட்டமும் ஆசிரியப் பயிற்சி யில் முதுகலைப்பட்டமும் பெற்று பதினான்கு ஆண்டுகள் நெடுஞ் சாலைத் துறையில் பணியாற்றி பின்னர் முதுகலை ஆசிரியப் பணிக்கு அரசுப் பள்ளியில் சேர்ந்தேன் .புதியதாக சிலப்பதிகாரம் ஒரு செய்யுள் பகுதி எடுக்க வேண்டிய நிலையில் நாளங்காடி,அல்லங்காடி,சதுக்கபூதங்களைக் குறித்து விளக்கும் பொழுது ,ஒரு மாணவி எழுந்து ,தப்பு செய்த கோவலனை அந்த  பூதம் ஏன் கொல்லவில்லை என்று கேட்டாள் .எதிர் பாராத இந்த கேள்வியால் ஒரு நிமிட தடுமாற்றம் என்றாலும் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற உண்மையின்படி அவன் கொல்லப்பட வேண்டும் என்பதனால்தான் இளங்கோவடிகள் அவனைக் கொல்லாமல் கதாநாயகனைக் கதையுடன் கொண்டு சென்றார் என்று கூறி சமாளித்த என் மூளையை நானே பாராட்டிக் கொண்டேன்