Thursday 12 September 2013

thai and thaimai[mother andmotherhood]

நான் அலுவல கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் .1995.இங்கிலாந்து இளவரசி டயானா இறந்த சமயம்.எனக்கும் ,அலுவலகக் கண்காணிப் பாளருக்கும் தாய்மை குறித்துப் பேச்சு.இதே இளவரசி தாய்மை உணர்வுடன் இருந்திருந்தால் இரண்டு பிள்ளைகளை விட்டுப் போயிருக்க மாட்டாள்.நம் இந்தியத் தாய் இப்படி செய்திருக்க மாட்டாள் என்ற ரீதியில் பேசினோம்.தாய் வேறு,தாய்மை உணர்வு வேறு ;பெற்ற தாயாக இல்லாவிடினும் பிள்ளைகளைப் பேணுகின்ற [தன் பிள்ளைகளுக்கு செய்வதனைப் போன்றே ]கடமைகளை செய்கின்றவர் இருக்கின்றனர்.பெற்ற தாயாக இருந்தாலும் பிள்ளைகளைப் புறக்கணிக்கின் ரவர்களும் உண்டு.என் பெண் பிறந்திருந்த நேரம்;நான் அம்மா வீட்டில் இருந்தேன்.பத்தியக் குழம்பு வைத்தி ருந்தார்கள் ,கணவருக்குப் பிடிக்குமே என்றதனால் அம்மாவிடம் சொல்லி அவர்கள் வீட்டிற்குக் கொடுத்தனுப்பினோம் [2முட்டைகளும் போட்டு]மாலையில் எங்கள் வீட்டிற்கு வந்த கணவரிடம் ,குழம்புச்சுவை குறித்துக் கேட்டோம்.அப்படி ஒரு விசயமே அவருக்குத் தெரியப் படுத்தப் படவில்லை.அனைத்தையும் என் மாமியாரே சாப்பிட்டு விட்டிருக்கிறார் என்பது 2நாளைக்குப் பிறகு எங்களுக்குத் தெரிய வந்தது.'கிடைக்கும் பிடி சோறும் தனக்கென உண்ணாது கொடுக்கின்ற கோவிலது'என்றும்' ',நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்;ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்'என்றெல்லாம் பாடிய கவிஞர் களை நினைக்கத் தோன்றுகிற தல்லவா?தாய்மை உணர்வு இப்படிச் செய்திருக்காதல்லவா?திரு.வீ.க.தன் 'பெண்மை'எனும் கட்டுரையில் எழுதுவார் 'தெய்வம் என்று எங்கே ஓடுகிறீர் ;தியாக உணர்வுடன் இருக்கும் பெண்ணே தெய்வம் 'என்று. எனவே பெற்ற பிள்ளைகளின் இன்பம் தான் தன் இன்பம் என்று டயானா நினைத்திருந்தால் இறந்திருக்க வாய்ப்பில்லையே!இவ்வாறு சுய நலத்துடன் இருக்கும் தாயிடம் வளரும் பிள்ளைகள் பின்னாளில் பிறரது இன்ப துன்பங்களை அறியும் தன்மை யற்றுத் தானே வளர்கிறார்கள்!எனவே,தாய் என்பவள் தாய்மை உணர்வுடன் இருத்தல் அவசியம்.இல்லையெனில் பிற் காலத்தில் பிள்ளைகளால் வெறுப்புக்கு ஆளாவது கண்கூடு!

Thursday 2 May 2013

mozhium baavangalum

ஒரு மொழியைப் புரிந்து கொள்வது என்பது பேசுவதைக் காட்டிலும் எளிமை என்றுதான் கூற வேண்டும்.பேசுகின்றவர்கள் என்ன பாவனையில் பேசுகின்றார்கள் என்பதனை வைத்து இந்த விஷயம் குறித்துத் தான் பேசுகிறார்கள் என்பது ஓரளவு விளங்கும். என் பெண் பள்ளியில் சேராத

 வயதில் ,நான் நாகையில் பணி புரிந்தேன்.வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கு வருவது வழக்கம்.என் தங்கை என் பெண்ணை பார்த்துக் கொள்வாள்.கிட்டத் தட்ட 2 வருடங்கள் அவ்வாறு இருந்த நிலையிலும்,நான் மகளிர் விடுதியில் தங்கியிருந்த காலம்.என்னுடன் தங்கியிருந்த,கஸ்டம்ஸ் இல் பணியாற்றிக் கொண்டிருந்த கடலூர் பெண் ஒருத்தியை,தஞ்சையை சுற்றிப் பார்க்கவும் 2நாட்கள் விருந்தினராகவும்,நாகையில் இருந்து அழைத்து வந்திருந்தேன்.[பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவளது திருமணத்திற்கு செல்ல இயலாது நேரில் வீட்டிற்கு சென்று  பார்த்து வந்தோம்.]தஞ்சைக் கோயில்,சினிமா,புதியதாகத் திறந்திருந்த விமான நிலையம் ஆகியவற்றைப் பார்த்தோம்.என் கணவர் வீட்டினருக்கு நட்பு,பிறரிடம் பண்புடன் பழகும் தன்மை இவையெல்லாம் மருந்துக்கும் கிடையாது என்ற வழக்கத்தின்படி [தாய் வழிப் பழக்கம்;எனவே தொட்டில் பழக்கம் என் வீட்டுக்காரருக்கு.பிள்ளைகளின் நட்புக்கு மட்டும் ஏனோ தடை இல்லை.அதுவரை அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.]அந்தப் பெண்ணை அழைத்து வந்ததற்கு எங்கள் மொழியிலேயே என்னை கோபிக்கிறார்.நானுமெதிர் வாதம் செய்கிறேன்.இந்த வயதுப் பக்குவம் அப்பொழுது இல்லை.அந்தப் பெண்ணுக்கோ என்னவோ சண்டை என்று புரிகிறது.எதற்கு என்று விளங்கவில்லை.நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் மாறானது இவர் வளர்ந்தது.என்னால் பயந்து திருட்டுத் தனமாகவெல்லாம் பேசவோ,செயல் படவோ முடியாது.அதுவுமன்றியும்,எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் [காய்கறிக் கார அம்மா,கொத்தனார்,ஆசாரி,கல்லூரி நண்பர்கள் ஆசிரிய,ஆசிரியைகள் யாராயினும் ]நன்றாகப் பேசுவதும்,உபசரிப்பதும் இயல்பாகவே இருக்கும் குணம்.அந்தப்பண்பு இவரை,இவர் குணத்தை எதிர்க்க செய்தது.நல்லவேளை,அந்தப் பெண் திருமண மாகதவள் என்பதனால் என்ன வென்று கேட்கவில்லை;நானுமவள் பொருட்டுத் தான் பேச்சு என்று காட்டிக் கொள்ளவும் இல்லை.எனவே,மொழி யை,புரிந்து கொள்வது,பாவங்களை வைத்து எளிமை எனலாம்.பேசுவது கடினமே.முயற்சியும் ஆர்வமுமே எளிமைப் படுத்தும்.நான் ராஞ்சியில் இருந்து ட்ரெயினில் திரும்பி வரும் பொழுது அதில் வந்தவர்கள் கன்னியாகுமரியில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தார்கள்.ஹிந்தியில் தான் .ஊர் பெயர்களைக் குறிப் பிட்டதனால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.நானும் ஊர் பெயர்களை மட்டும் அவர்களிடம் கூறினேன்.சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவன் ஒருவனும் சென்னையை சுற்றியுள்ள இடங்கள் குறித்து ஆங்கிலத்தில் கேட்டான்.எனக்குத் தெரிந்த இடங்களையும் அரைகுறை ஆங்கிலத்தில் கூறியதுடன் பிற சென்னை மாணவர்களிடம் கேட்கக் கூறினேன்.என் பையன் ஹிந்தி பேசுவதைக் கேட்டு,எனக்கும் அந்த மொழியைப் பேச ஆசையாக இருந்தது.மொழியைப் பேசுபவர்களுடன் சேர்ந்து நாமும் பேசினால் வந்து விடும் இல்லையா?முன்பெல்லாம் எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் பேங்க் காரக் குடும்பம் பெங்காலி கலந்த ஹிந்தி பேசுவார்கள்.அதில் மௌசி [சித்தி]சுந்தர் [அழகாக]கித்னா [எத்தனை]என்ற வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.வங்காள மொழியில் ஜொமாய் என்பது மாப்பிள்ளை.எங்கள் மொழியிலும் தான்.எதையுமே கூர்ந்து கவனிப்பதுடன் ஆர்வம் முக்கியம்.என் பையனுக்கு செல் போனில் மெசேஜ் இலவசம் என்பதனால் நான்டைப்        பண்ணக் கற்றுக்கொண்டேன். எனவே,கற்றுக் கொள்வது ஆர்வத்தின் அடிப் படையில் தானே!

Monday 29 April 2013

manivilaa.

மணிவிழா எனும் 60ஆம் கலியாணம் குறித்துக் கூறும் பொழுது மு.க.ஸ்டாலின் பற்றிப் படிக்க நேர்ந்தது. அவருக்குப் பெயரன்,பெயர்த்திகள் பிறந்து பின் அந்தத் திருமணம்.அதைவிட கருணாநிதியை நினைத்தால் இன்னும் ஆச்சரியம்.தன் மகனின் 60யையே பார்க்கிறாரே!எனக்கு நினைவு தெரிந்து இந்த அம்மா திருமணம் செய்து வந்த புதிதில், பட்டு வேலை செய்து வந்த முதலியார் ஒருவரின் 60ஆம் திருமண த்தி ற்கு,வேறு சில மகளிருடன் சேர்ந்து சென்றோம்.[என் சிறு வயது அறிவு அவரை முதலாளி என்று நினைத்தது.ஆனால் இனத்தில் முதலியாரைத் தான் அவ்வாறு குறிப்பிட்டிருப் பார்கள் போலும்.இன்றும் அந்த வீடு பணக்கார தோரணையில் தான் இருக்கிறது.]அவர் தன் மனைவியுடன் திருமணக் கோலத்தில் கையில் விபூதித் தட்டுடன் நின்று ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தார்.எல்லோரும் வரிசையில் நின்று தட்டில் காசோ பணமோ போடுவதும் ,அவரிடமிருந்து பய பக்தியுடன் வணங்கி விபூதி பெறுவதும் எனக்கு புதுமையான நிகழ்ச்சி.இன்னும் சில வருடங்கள் கழிந்ததும் எங்கள் வலப் பக்கத்து வீட்டுக் காரருக்கு 80 திருமணம்.சல்லடையில் மணமக்களுக்கு நீர் ஊற்றினார்கள்.[அந்தக் குடும்பம் சரியான கருமிக் குடும்பம்.இந்தக் கஞ்சத் தினால் அவர் பையனுக்குத் திருமணம் செய்த சேலத்துப் பெண் சொல்லாமல் பிறந்த வீட்டுக்கே போய் விட்டது தனிக் கதை.]இவர்கூட இவ்வாறெல்லாம் செய்து கொள்கிறாரே என்று எனக்கு கேலி கலந்த ஆச்சரியம்.அப்பொழுதெல்லாம் அவ்வளவாக சிந்திக்கத் தெரியாத வயது.கேலியும் சிரிப்பும் தான் வாழ்க்கை.எனவே மகிழ்ச்சி யாக கேலி செய்து பொழுது போக்குவோம்.சமீபத்தில் என் அண்ணா ஊரினரையே கூட்டி 60 செய்து கொண்டாராம்.என்னிடம் சொன்னவர் களிடமெல்லாம் 'கல்யாணம்தான் யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டார்.பாவம் இதில் அவருக்கு மகிழ்ச்சி என்றால் சரிதான்'என்றேன்.ஏனோ இந்த மாதிரிசெயல் கள் எனக்கு மகிழ்வைத் தருவதில்லை.திருமணநாள் என்பது நினைவில் இருக்கும்.கொண்டாட்டத்தில் இருந்ததில்லை.பள்ளியில் எங்கள் 25ஆவது திருமண தினம் என்று கூறி,வம்படியாக பிற ஆசிரியைகள் என்னிடம் இனிப்பு காரம் வாங்க வைத்து விட்டார்கள்.நானும் நட்பு நிலையில் இந்த சாக்கில் சாப்பிடட்டும் என்று சொல்லியே வாங்கிக் கொடுத்தேன் என் மகிழ்ச்சி எல்லாம் பேப்பர் valuvation சென்று வந்த பணத்தில் பிள்ளைகளுக்கு உடை,சிறிய அளவில் ஆபரணங்கள்,தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பதில் தான்.பணம் போதாது என்றால் என் கணவரிடம் வாதடியாவது கேட்டு அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டால் ரொம்பப் பெருமையாக இருக்கும் அவரும் பிள்ளைகள் என்றால் பெரும் பாலும் கொடுத்து விடுவார்.இதைத் தாண்டி தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்கு ஏதும் இல்லை.அப்படி யாரும் மகிழ்விக்க நினைத்தால் சங்கடப்பட வேண்டியிருக்குமோ என்னவோ?மகிழ்ச்சிக்குப் பதில் சங்கடத்தை வாங்குவது கொடுமை அல்லவா?

Wednesday 24 April 2013

eliya vaalkkai

              என்       கல்லூரிப் பருவம் மிக எளிமையான ஒன்றாக இருந்திருக்கிறது.பள்ளி வாழ்க்கை முடிந்து புகுமுக வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் ஆசிரியைகள் செய்து வரும் உடை அழகும்,பேசும் கம்பீரமும் ,நடை வேகமும் ,முக்கியமாக அவர்கள் பேசும் ஆங்கிலமும் என்னை வியக்க வைத்தது.ஓரிரு உடைகளையே மாற்றி உடுத்தும் எங்கள் ஊரின் பழக்கத்துக்கு, எளிமைக்கு இவை வியப்பை ஏற்படுத்தியதில் வியப்பொன்றும் இல்லை.எங்கள் ஊரில் இருந்து எங்கள் இனப்பெண்களில் ,கல்லூரிக்கு செல்லும் முதல் பெண் நான் தானே!எங்கள் தெருவில் இருந்த ஒருவர் ,என்னை அடிக்கடி கேலி செய்து பேசும் வார்த்தை 'என்ன படித்து என்ன ,சட்டி பானை தானே கழுவப் போகிறாய்'என்பதுதான்.{அவருக்கு படிப்பு வாசமே இல்லை என்பதுடன் திக்கித் திக்கித் தான் பேசுவார் என்பது வேறு விஷயம்.}கல்லூரிக்கு வரும் பெரும் பாலானவர்கள் உடை விசயத்தில் எளிமையாகத் தான் வருவர்.அதனால் வேற்றுமை தெரியாது.இப்படி இருக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு தயிர் விற்க வரும் ஒரு அம்மா தன் [அவளும் வேறு ஒரு கிராமத்தில் இருந்து வருபவள்.]பெயர்த்தி கல்லூரியில் படிப்பதாககவும்,5 நாட்களுக்கு 5 நிறத்தில் புடவை கேட்பதாகவும் பெருமையுடன் கூறியது எனக்கு வியப்பை தந்ததுடன் பொறாமை யாகவும் இருந்தது.அப்பொழுது கல்லூரியின் DRESSCODE புகுமுக வகுப்பில்,டிகிரி 1ஆம் வருடத்தில் மட்டும் பாவாடை தாவணி.பிறகு கட்டாயமாக புடவை தான்.புது டிரஸ் என்பது மிகக் குறைந்த விலை மற்றும் தரமாகத் தான் இருக்கும்.அந்தப் பழக்கம் தான் என்னை எளிமைப் படுத்தி இருக்கிறது.மேலும் 6,7வகுப்பு படிக்கும் வரை நெசவு வேலைக்கு சென்று [விடுமுறை நாட்களில்]காசு சேர்த்து அடுத்தாண்டு புத்தகம் ,பழைய விலைக்கு வாங்கி விடுவதற்கு அப்பா பழக்கப் படுத்தினார்.அவ்வாறு எளிய வாழ்க்கை வாழ்ந்த தனால் ,இன்றளவும் சிறப்பாக இருக்க முடிகிறது என்று நம்புகிறேன்." இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் '"என்ற வள்ளுவரின் வாக்கு வாழ்க்கைக்கு எவ்வளவு பொருந்து கிறது.

mudalaiyum moorkkanum

நான் நன்னூல் இலக்கணம் படிக்கும் பொழுது 'முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா'என்று வரும்.விடா என்று அகிறிணைப் பன்மையில் கூறப் பட்டிருக்கும்.மூர்க்கன் ஆகிய மனிதனை அகிறினையில் சேர்த்திருப்பது எவ்வளவு பொருத்தம் என்பதனை என் வாழ்வில் அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.பிறரின் உணர்வுகள் என்ன,அவர்களுக்கு தோன்றும் சங்கடங்கள் என்ன,அவர்களின் துன்பத்தில் நாம் ஏதும் உதவ முடிகிறதா,உதவ முடியாவிட்டாலும் நெருக்கடி தராத உதவியாவது செய்ய அறிவு வேலை செய்யாத இது போன்றவர்களை உயர் திணையில் சேர்க்காதது எவ்வளவு பொருத்தம்."அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை"என்று வள்ளுவரும் இது போன்றவர்களை,அறிவில்லாதவர் என்று திட்டியும்,பிற உயிர்களின் துன்பத்தை அறிந்து கொள்ளாத அறிவினால் பயனில்லை என்று கடுமையாகக் கூறியிருக்கிறாரே!  தான் ,தன் விருப்பம்,தான் நினைக்கும் எண்ணங்கள் மட்டுமே உலகம் என்ற மூர்க்கத் தனம் கொண்டவர் களெல்லாம் அகிறினை அன்றி வேறென்ன?

Thursday 21 March 2013

mahabharadham AMBAI character

சன் T.V.யில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பப் படுகிறது.அம்பை என்ற ஒரு பெண் பாத்திரம்.நீதிகளையும்,அநீதிகளையும் எடுத்துரைக்கும் இதிகாசம்தான் பாரதம்.அந்தக் கால கட்டத்திலேயே பெண்ணுரிமை இப்பாத்திரத்தின் வாயிலாக பேசப்பட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.இப்பெயரை நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.ஆனால் இதன் தன்மையை,பார்க்கும் வாய்ப்பு தொடரில் கிடைத்துள்ளது.தான் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாத சூழல்;அதனை எதிர்த்துப் போராடும் துணிவு;அப்படிப்பட்ட ஒரு கால,இட,வாழ்க்கை நிலையிலும் என்ன மாதிரியான மனநிலை!பாரதியார் கூட, தன், பாஞ்சாலி சபதத்தில்,இதிகாசத்திற்குப்,பிற்பட்ட காலப் போக்கில் தான்,திரௌபதியை,கணவனுக்கு எதிர்ப்பைக் காட்டும் பெண்ணாகப் படைத்திருப்பார்.ஆனால் இந்தப் பாத்திரம் முன் காலத்திலேயே முற்போக்குப் பெண்ணா என்று வியக்க வைக்கிறது.அரச குடும்பமாக இருந்தாலும்,சுய விருப்புடன் நடக்கும் [நியாயமான]பெண்ணை பெற்றவர்களும்,மற்றவர்களும் வெறுத்து ஒதுக்கும்,அந்தக் கால முறையை அறிகிறோம்.கொஞ்சம்,கொஞ்சமாக,பெண்கள் முன்னேற்றம் என்பது எத்தனைப் போராட்டங்களை எதிர் கொண்டதோ?பெற்றோர்களே கூட தங்கள் பெண்களுக்கே உரிமை வழங்க என்னென்ன அனுபவங்களை மேற்கொண்டிருப் பார்கள்?எத்தனை தலைமுறைகள் தாண்டி இருக்கும்!பெண்ணுரிமைக்கு வித்திட்டவன் பாரதி என்று நினைத்துப் பெருமிதப்பட்டுக்கொள்ளும் நிலையை மிஞ்சும் அளவுக்கு,எந்த அடித் தளமும்,துணையும் இல்லாமல் மகாபாரதக் கால 'அம்பை 'ஒரு உயர்ந்த பாத்திரம்தான்!

Friday 15 March 2013

puliyanthoppu

எங்கள் ஊரின் வீட்டுக் கொல்லைப் புறம் பெரிய புளியந்தோப்பு இருந்தது.பெரிய என்றால் ரொம்பவே பெரிய்.......யது.அந்தத் தோப்புக்குள் தான் பெரிய,வரலாற்று சிறப்பு மிக்க,கலைநயம் நிரம்பிய கோவிலும் உண்டு.தோப்புதான் 35வருடத்துக்கு முந்திய பப்ளிக் toilet.இன்றைய கோவில் சுற்றுப் புறத்தைப் பார்த்தால் நம்பமாட்டார்கள்.அத்துடன் அருவருப்பாகவும் உணர்வார்கள்.தொல்பொருள் துறை கட்டுப் பாட்டின் கீழ் வந்த இத்தனைக் காலங்களில் எவ்வளவோ மாற்றங்கள்!ம்...அது இருக்கட்டும்.தோப்பாக இருந்த பொழுது புளியமரங்கள் காய்க்கத் தொடங்கி பழங்கள் உதிர்ப்பு வரையிலும் வருடந்தோறும் குறிப்பிட்ட ஒருவரே குத்தகைக்கு எடுப்பார்.நிறைய கெடுபிடி;ஒரு பழம் கூட தெரியாமல் பொறுக்கி விட முடியாது.நல்ல வெயில் காலம் வேறு.நிழல் தேடி ஒதுங்கவும் முடியாது.[ஜப்பானில் இருக்கும் சொகுசு toilet ஆ?]என் அண்ணன் திருமணத்தின் பின் அண்ணியை காரணமாக்கித் தான் எங்கள் அப்பா toilet கட்டினார்.இப்படியான ஒரு நாளில் என் தம்பி பழம் பொறுக்கினானா அல்லது மரத்தடியில் ஒதுங்கினானா தெரியவில்லை.அந்த குத்தகை ஆள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க முடியாது.அவ்வளவு மோசம்.அவன் மனைவி அதற்கும் மேல்.ஒரு பெரிய கொட்டகை போட்டுக் காவல் இருப்பது,பழம் சேகரிப்பது எல்லாம்.அந்தக் கொட்டகையில் தம்பியைக் கட்டிப் போட்டு விட்டார்.ரொம்ப சின்னப் பையன் வேறா?மிரட்டி வைத்துக் கொண்டிருக் கிறார்.அரை மணி கழித்துத் தான் எங்களுக்கு செய்தியே வருகிறது.பிறகு கெஞ்சிக் கூத்தாடி கூட்டி வந்தோம்.நாங்கள் சிறு வயதிலிருந்தே எப்படியெல்லாம்,எதற்கெல்லாம் போராடி இருக்கிறோம்!வாழ்க்கையை எளிமையாக எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று.அவ்வளவே.அதே புளியந்தோப்பில் ஆடி மாத ஏகாதசியில் ஊஞ்சல் கட்டி,பெண்கள் விளையாடியும் இருக்கிறோமே!இன்று தோப்பே இல்லை.


Tuesday 5 March 2013

paarvaikalil konangalum konalkalum

                                 
கல்லூரிப் படிப்பில் கண்ணப்ப நாயனார் பற்றிப் படித்திருக்கிறோம்.இன்ன கொள்கைகள்,என்பது தெரியாமலே கடவுளிடம் வெறித்தனமான அன்பு கொண்டவர்.செருப்புக் காலால் இறைவனின் கண்ணை அடையாளம் கொண்டும்,மாமிச உணவினை படைத்தும் சிவனிடம் ஐக்கியமானவர்.சிலர் இது போன்றே குருட்டுத் தனமாக செயல் படுவர்.ஆனால் அது நன்மையில் முடிந்திருக்கும்.சமீபத்தில் என் கணவர் ஒரு மின் அடுப்பு வாங்கினார்.அது எனக்குப் பழக்கமில்லை.அத்துடன் காஸ் cylindor தீர்ந்ததும் அவருடைய முட்டாள் தனத்தினால் தான்.எப்படியும்மின் அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய கட்டாயத்தின் பேரில் அதனைக் கற்றுக் கொண்டேன்.இன்று அந்த அடுப்பு சமையலுக்கு எளிதாக இருக்கிறது.என் பெண்ணுக்கு ஒன்று வாங்க கணவரிடம் சிபாரிசு செய்கிறேன்.{திட்டுவது தொடர்கிறது.அது வேறு விஷயம்.}ஒரு 12 வருடங்களுக்கு முன் மிகக் குறைந்த விலையில் 2 பிளாட் வாங்கினார்.இருக்கும் கொஞ்ச நகைகளையும் அடகு வைத்து பிடிவாதமாக வாங்கினார்.வீட்டில் இருக்கும் நிலை குறித்த எந்த பயமும்,எப்பொழுதும் அவருக்கு கிடையாது.அந்தக் காட்டில் போய் வாங்குகிறாரே என்று எனக்குத் தான் குழப்பம்.10வருடங்களுக்குப்பிறகு என் பெண்ணுக்குக் கல்விக்கடன் வாங்கும் பொழுதுதான் அதன் அருமை தெரிந்தது.இன்றைய நிலையில் அதனைச் சுற்றிலும் வீடுகள்.கீழ் வீட்டில் இருப்பவர் களிடம் வாடகையைக் கூட்டிக் கேட்டார்.இருக்கிற வாடகையும் போய்விடப் போகிறதே என்று நான் பயந்தது போலவே அவர்கள் வீட்டைக் காலி பண்ணி விட்டார்கள்.என்னைப் பார்த்துப் பேசவே தயங்கிக் கொண்டிருந்த அவருக்கு 10நாட்களில் அவர் கேட்டதை விட 1.5மடங்கு அதிக வாடகைக்கு ஆள் வந்து,நான்தான் வாயடக்கிக் கொள்ள வேண்டி வந்தது.உனக்குப் 10 வருடமாவது teaching post கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.இருக்கிற வேலைக்கு வேட்டு வராமலிருந்தால் சரி என்று அலட்சியப் படுத்துவேன்.14 வருடங்கள் ஆசிரியப் பணியாற்றினேன்.என் பெண்ணின் பயோ படிப்பு குறித்து தெரிந்தது போல் பேசிக் கொண்டே இருப்பார்.நாங்கள் அவரை ஓட்டுவோம்.ஆனால்,இன்று.......இப்பொழுது என் பையனுக்கான வேலை குறித்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்.நானும் செண்டிமெண்டாக மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன்.ஆனால் அவரைத் திட்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.[நை ....நை ...என்று விடமாட்டீர்களா!]ஒரு முக்கியமான நிகழ்ச்சியை சொல்லியே ஆக வேண்டும்.என் பையன் U.K.G.படிக்கும் பொழுது பரமக்குடியில் ஒரு திருமணத் திற்கு சென்ற நாங்கள்,ராமேஸ்வரம் சென்று வர எண்ணி busstandl ல்  நின்று கொண்டு இருந்தோம்.பஸ் எங்கே நிற்கும் என்று தெரிந்து வர அவர் சென்றார்.நான் 2பேரையும் ,laggage உடன் சேர்த்துப் பார்த்துக் கொண்டு நின்றேன்.பின்னால்,அருகில் உள்ள பாத்ரூம் க்குச் சென்ற என் பெண்ணுக்கு உதவ சென்ற 2நிமிடங்களுக்குள்,என்னைக் காணாமல்,தேடிக்கொண்டு,என் பையன் எங்கோ ஓடி விட்டான்.வெளியில் வந்து பார்த்த எனக்கு,என்ன செய்வது என்றே தெரியவில்லை.பயம்,laggagejai வைத்துவிட்டு,என் பெண்ணைப் பிடித்துக் கொண்டு பக்கத்தில் உள்ள கடைகளில் தேடுகிறேன்;எங்கும் அவனில்லை.இப்பொழுதும் மனம் பதறுகின்றது என்றால்,அப்பொழுது என் நிலையை நான் எப்படி உணர்த்துவேன்?திடீரென்று,சினிமா கதா நாயகன் போல் வந்தவர் [என் கணவர் தான்]விடுவிடு என busstand க்கு எதிர் புறம் சென்றவர்,மீன்கூடைக் கார அம்மாவிடம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருக்கிறான்;அழாமல் இருக்கிறான்;மேலும் வேடிக்கை வேறு இவனுக்கு என்று கூட்டிக் கொண்டு வந்தாரே பார்க்கலாம்!அப்பாடா....நல்ல நேரம்.இவ்வாறான பல செயல்பாடுகள் அவருடையன!ஒருவேளை இவருக்கு என்றே சில அமைப்போ?[என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதே அவருக்கு ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தானே!]அவருடைய அணுகுமுறைகள் நம் பார்வையில் கோணல்!ஆனால் அவருடைய கோணம் அப்படித்தானோ என்னவோ?33வருட வாழ்க்கையில் நானே இன்னும் தடுமாறுகிறேன்.இதுபோல்உலகில் என்னென்ன நிகழ்கின்றதோ?எங்கள் ஊரின் நகரப் பகுதியில் ஒருவர்,கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார்.உடலில் ஒரு துணியும் இருக்காது.நான் கொஞ்சம் வளர்ந்து,அறிவு தெரிந்த பருவத்தில்,வீட்டுப் பெரியவர் களிடம் அவரைக் குறித்து,கேலி செய்தால்,என்னைக் கண்டிப்பதுடன்,அவரை உயர்வாகவும் கூறுவார்கள்.பெரிய ஹோட்டல் களில் அவருக்குத் தான் முதலில் உண்ணக் கொடுப்பார்களாம்;பிறகுதான் வியாபாரமே ஆரம்பிப்பார்களாம்.அப்படி செய்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்று நம்பியது ஒருபுறம் இருந்தாலும்,அவ்வாறே நடந்துமிருக் கின்றதே!அவராக எங்கும் போய் கேட்கக் கூட மாட்டாராம்!இன்றும் வட மாநிலங்களில் மூன்றாம் பாலினத் தவரைப் பார்த்து செல்லும் காரியம் வெற்றி அடையும் என்று நம்புவார்களாம்.என் பெண் கூட கல்லூரித் தேர்வுக்கு செல்லும் வழியில் இருக்கும் 3ஆம் பாலின ஒருவரைப் பார்த்தால் வினாத்தாள் எளிமையாக இருக்கும் என்பார்கள் என்று கூறுவாள்.உண்மையா என்ற ஆராய்ச்சி யில் இறங்காமல் அதனதன் இயல்பில் வாழ்ந்து விட வேண்டியது தான்.


Thursday 28 February 2013

loud speaker and boys

சமீபத்து வார இதழ் ஒன்றில் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு 20
வருடங்களுக்கு முன்னாலொலி பரப்பப் படும் இசைத் தட்டுகள்,அதற்காக,வேலையை விட்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் பையன்கள் என்று சில சுவாரசியமான பகுதியைப் படித்தேன்.நாங்கள் சிறு வயதினராய் இருக்கும் பொழுது கல்யாண வீட்டில் loudspeaker வைத்து விட்டால் ரொம்ப ஜாலி ஆகி விடுவோம்.பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம் அல்லவா?எங்கள் வீட்டிலேயே சிலர் திருமணம் வைத்துக் கொள்வார்கள்.வீடு பெரியது.அப்பொழுதெல்லாம் இலவசமாகவே வீட்டைக் கொடுப்போம்.ரொம்பப் பெருமை யாக இருக்கும்.அது போகட்டும்.எங்கள் தெருவில் எங்கள் உறவினர் வீட்டுத் திருமணம்.என்ன காரணமோ,பகையோ தெரியவில்லை.எங்களை அழைக்கவில்லை.அந்த வீட்டுத் திண்ணையில் ரேடியோ போடுபவர் தன்னுடைய கருவிகளை வைத்துப் பாடல்களை ஒலிபரப்புகிறார்.சுற்றியும் பையன்கள்.ஒலித்தட்டு ஊசியில் வைத்து இயக்கப் படுவது.அந்த வேலையை செய்வதற்குத் தான் கும்பல்.இந்தக் கும்பலில்தான் பள்ளிக்கு செல்லும் வேலையை விட்டுவிட்டு காலையிலேயே என் அண்ணனும் அங்கு போய் உட்கார்ந்திருக்கிறான்.(அப்பொழுதெல்லாம் 'ன்'தான்.)எங்கள் அப்பா:எங்கெஅவன்?நான்:அந்த வீட்டுல போய் உட்கார்ந்து இருக்கான்.அப்பா:போய் கூப்பிட்டுக்கிட்டு வாஅவனை.அன்னைக்கு சரியான மண்டகப்படி அவனுக்கு.இப்படித்தான் எனக்கும் அவனுக்கும் சிறு வயது முதல் பகை ஆரம்பித்திருக்கும்.இந்த பாட்டு என்றதும் என் நினைவுக்கு வருவது ரேடியோ பெட்டிதான்.எங்கள் தெருவில் ஒரே ஒருவர் வீட்டில் மட்டும்தான் அப்பொழுது ரேடியோ இருந்தது.நான் என் சிறு வயது தங்கையைப் பார்த்துக் கொள்ளும் சாக்கில் அந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வேன்.cyelon ஒலிபரப்புப் பாடல்கள் அப்பொழுது இனிமையாக இருக்கும்.(தமிழ்ப் பாடல்கள்தான்.)1984வரைகூட இலங்கை வானொலிப் பாடல்களை இனிமையாகக் கேட்க முடிந்தது.ம்....அப்புறம் எங்கள் வீட்டிலும் ஒரு ரேடியோவை என் அண்ணன் வேலைக்கு சென்றவுடன் வாங்கினான்.எங்கள் எல்லாருக்கும் எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டது.அப்பா நியூஸ் மட்டும் கேட்பார்.அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் பாட்டு கேட்போம்.ஸ்டூலில் ஏறித்தான் on பண்ணுவோம்.அப்புறம் ஒருநாள் அப்பாவுக்கும்,அண்ணனுக்கும் ஏதோ மனவருத்தம்.ரேடியோவை தூக்கிப் போட்டு அப்பா உடைத்து விட்டாரே!கொஞ்ச நாள் கழித்து எனக்குத் திருமணம் ஆனது.மாமியார் வீட்டிலும் ஒரு பெட்டி இருந்தது.உண்மையிலேயே மாமியாருக்கான வீடுதான் அது.எந்நேரமும் மாமி அந்தப் பெட்டி இடம்தான் இருப்பார்.அது தவிர ஒரு transistor ம் அவர் கையருகில் இருக்கும்.ஒரு பெண்மணி ரேடியோ வுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு அதிசயம்.எங்கள் அம்மாவுக்கு அந்த உரிமை கிடையாதே!அதனால்தான் எனக்கு அப்படி ஒரு வியப்பு.ம்....இன்றைக்கு காலம் எப்படியெல்லாம் மாறிவிட்டது.loudspeaker இல்லை;பையன்களும் பெரிதாக நினைப்பதில்லை.I.PAD.2எங்கள் வீட்டில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.என் கணவர் மட்டும் செல்போன்,T.V.,என்று மாற்றி,மாற்றி பாட்டு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.எனக்கு சிறு வயதில் இருந்த பாட்டு கேட்கும் ஆவல் அறவே இல்லை. 

Wednesday 27 February 2013

samukamum tirumanagalum

எங்கள் வீட்டில் குடி இருப்பவர் வீட்டிற்கு சம்பள ஆள் ஒருவர் வருகிறார். (அவர்கள் கடை வைத்திருப்பவர்கள்)ஒரு காலை நேரத்தில் குடிக்கத் தண்ணீர் கேட்டவர் ஒரு லிட்டர் தண்ணீரையும் குடித்து விட்டார்.என்ன காலையிலேயே வெறும் வயிற்றில் இவ்வளவா என நினைத்து அவரிடம் பேச்சு கொடுத்தேன்.விருப்பத் திருமணம் செய்து கொண்டவர்,பெண் இந்து,இவர் முஸ்லிம்.பெண் குழந்தையும் உண்டு.இரு வீட்டினரின் ஆதரவும் கிடையாது.B.A.HISTORY படித்தவர்,அந்தப் பெண் B.Sc.B.Ed.(இருவருக்கும் என்றைக்கு வேலை கிடைக்கும்?எப்பொழுது இவர்கள் அமைதியான வாழ்க்கையை எதிர் கொள்வது?குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள்?இவருக்கு கிடைக்கும் வருமானம் எப்படி போதும் என்றெல்லாம் நான் நினைத்து என்னுள் வருத்தம் கொண்டேன்.)அந்தப் பெண் குறிப்பிட்ட இனத்தவரா எனக் கேட்டேன்.எப்படி சரியாகக் கேட்டீர்கள் என்று ஆச்சரியப் பட்டார்.பொதுவாக ஆணோ,பெண்ணோ.கலப்புத் திருமணம் என்றால் பெற்றோர் தயங்குவது சமூகத் தவரின் கேள்விகளுக்கும்,பார்வைக்கும் தான்.பிறகு தான் பொருளாதாரம்,இன்ன பிற செய்திகள்.எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி இந்து.முஸ்லிம் ஆடவரை மணந்து,இரு பெண் குழந்தைகள்.ஆனால்,அரசுஉத்யோகம்.பெரிய பெண் 9ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தான் இருவருள்ளும் கொள்கை வேறுபாடு.கணவர் தங்களின் இனத்தின் படி பெண்ணுக்கு உடனே திருமணம் செய்ய விழைகிறார்.அந்தப் பெண் மணியோ பெண்களைப் படிக்க வைக்க,நல்ல நிலைக்குக் கொண்டு வர விரும்புகிறார்.விளைவு கணவரைப் பிரிந்து,தனி ஆளாக நின்று பெண்களைப் படிக்கவும் வைக் கிறார்.கணவர் குடிமகன் ஆகி விட்டாராம்.அந்தப் பெண்மணி பொருளாதார ரீதியில் கணவரை சார்ந்து இல்லை. பெண்கள் படிப்பில் சிறந்தவர்கள். அவர்கள் பர்தா போடவில்லை.எனினும் சிறிய வீட்டில் அட்ஜஸ்ட் செய்து நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்.இந்தப் பெண்களின் திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதும் தெரியாது.எனவே,மதக்கலப்புத் திருமணம் ஏதேனும் ஒரு பின்புல ஆதரவில் நிகழ்தல் நல்லது.அல்லது கணவரின் முழுமை யான புரிதல் அவசியம்.இடையில் கருத்து வேறு பட்டால் பிள்ளை களின் அமைதி எட்டாக் கனி ஆகி விடும்.

Saturday 16 February 2013

maarkali bajanai

எங்கள் ஊரில் மார்கழி 30நாட்களும் பஜனைக் கோஷ்டி தெருக்கள் தோறும்,விடிகாலை 6மணிக்குள் வருவதுண்டு.எங்கள் தெருவிற்கு 6,6.30.க்குள் தினந்தோறும் வந்து விடுவர்.இதில் சிறப்பு என்னவென்றால் ,அவர்களைச்சுற்றி வந்து வணங்க வேண்டும்.எங்கள் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த மற்றுமொரு பழக்கம்.அதுவும் எப்படித் தெரியுமா?4,5ஆம் வகுப்பு சிறுமியாக இருக்கும் பொழுதே பழக்கப் படுத்தப் பட்டது.காலையில் 4மணிக்கே எழுந்து வாசலில் கோலம் போட்டு (தெருவில் யார் பெரிய....கோலம் போடுகிறார்கள் என்பது போட்டியாக இருந்த பருவம்)ஆற்றுக்குப் போய் குளித்து வந்து ,குடம் நிறைய நீர் எடுத்து (தூக்க முடிந்த அளவு)வாசலில் நிற்க வேண்டும்.அப்பொழுது தான் பஜனைக் கோஷ்டியும் நிற்பார்கள்.அவர்களின் காலில் நீர் ஊற்றி 3சுற்று அவர்களை சுற்ற வேண்டும்.பிறகு அவர்கள் தரும் துளசி இலை தான் பிரசாதம்.இவ்வாறு செய்தால் நல்ல கணவன் அமைவார் என்ற ஒரு மூடப் பழக்கம்.பெண் பிள்ளைகள் மட்டுமே இவ்வாறு செய்வதுண்டு.எங்கள் தெருவில் நான் மட்டுமே அவ்வாறு செய்திருப்பேன் என்று நினைவு.(எங்கள் அப்பா கணவரின் அமைவு குறித்த முட்டாள் தனத்தை எல்லாம் சொன்னது இல்லை.எங்கள் வீட்டில் இருந்த பெண்களின் ஆர்வமாகத் தான் இருக்கும்.வேறு எப்படி ஏமாற்றுவது?)இவ்வாறு நான் செய்விக்கப் பட்டதற்கு இன்னுமொரு காரணம்,எங்கள் அப்பாவின் தாயார் வைகுண்ட ஏகாதசி அன்று இறந்து வருடந்தோறும் ,திதி கொடுத்து,அப்பா மட்டும் திட உணவு ஏதும் உண்ணாமல்,விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி இரவு முழுதும் கோவிலில் கண் விழித்து ,மறுநாளில் துவாதசி காலையில் விரதம் முடிப்பதுடன்,பஜனையாளர்கள் 30,35
பேருக்கும் விருந்துணவு எங்கள் வீட்டில் தான் .அன்று மாலை பிள்ளையார் கோவில் பூஜைக் கான மண்டகப்படியும் எங்கள் வீட்டிலிருந்து தான்.எனவே நான் அவ்வாறான பாரம் பரியம் காக்கப் பழக்கப் படுத்தப் பட்டிருக் கலாம்.எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் இதனை செய்திருக்கிறேன்.என் அக்காவோ,தங்கைகளோ அவ்வாறு செய்விக்கப் படாததன்
காரணம் அவர்களின் வளர்ப்பு அவ்வாறோ என்னவோ?அது போகட்டும்.நான் 10,11வகுப்பு படிக்கும் பொழுது இச் செயல் பாடுகள் என்னால் செய்ய இயலவில்லை.மனமும் சிந்திக்க ஆரம்பித்து விட்டது.சரி,நல்ல கணவர் அமைந்தாரா?எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை;எவருடனும் பழக்கமும் இல்லை.(வளர்ப்பு அப்படி;வீட்டினரும் அப்படி.)ஆனால் என்னை வேலைக்கு அனுப்பியது மட்டுமில்லை.பிள்ளைகளுக்கு நிறைய அன்பு,கல்வி,சுதந்திரம் அனைத்தையும் கொடுத்தார்.இது போதும்.வேறு யாரேனும் என்றால் என்னை வேலைக்கு அனுப்பி இருப்பார் களோ,என்னமோ தெரியாது.என் ஏக்கம் என் பிள்ளைகள் மேற்கூறிய எங்கள் வீட்டின் நிகழ்வுகளைப் பார்க்க முடியவில்லை என்பதுதான்.இவர்கள் பிறக்கும் போது எங்கள் அப்பா உயிருடன் இல்லை.என்ன செய்வது இயற்கையை வெல்வார் யார்?

Tuesday 12 February 2013

vaazkkai nerikalum ilakkias seidhikal silavum

மணமாகி 6,7மாதங்கள் ஆன இணையருள்,அன்பு பற்றிய பேச்சு வந்தது.நான் கூறினேன்.'செம்புலப் பெயல் நீர் போல'மனமொ த் திருக்கவே ண்டும் என்று.யார் செம்புலம்?யார் பெயல் நீர்?எனக் கேட்டார் மணமகன்.தற்காலத் தவர்க்கு வாழ்வியல் நிகழ்வுகளிலேயே சந்தேகம் வரும் பொழுது இந்தச் சந்தேகமும் சரிதான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.EQUALITY தானே இன்றைய எதிர்பார்ப்பு.(பெற்றோர்க்கும் சேர்த்துத்தான்.)அப்படி இருக்கையில் யார் நிலமாய் இருப்பது,நீராய் இருப்பது.மனம்தான் ஒன்றிப் போக வேண்டும்.இல்லையா?ஐங்குறு நூற்றுப் பாடலில்,கணவனுடன் இல்லறம் நடத்தும் பெண்ணைப் பார்ப்பதற்கு,வளர்ப்புத் தாய் செல்கிறாள்.அவளிடம் அந்தப் பெண் கூறுகிறாள்.'என்பெற்றோரின் தோட்டக் கிணற்று நீர் தேனும்,பாலும் கலந்தது போன்று சுவை கொண்டது.என் கணவரின் வீட்டில் கிணறு இலைச் சருகுகள் நிறைந்து மான்கள் வாய் வைத்துக் குடித்து எஞ்சிய,கலங்கலான நீர்தான்.ஆனால் இதுதான் பெருமை யாக இருக்கிறது'என்கிறாள்.இன்றைய நிலையிலும் கூட எப்படிப் பட்டவாழ்க்கை கிடைத்தாலும் கணவனின் வீடுதான் உயர்வாகக் கருதுவது சமுதாயத்தில் ஒரு மதிப்பைத் தருகிறது.இன்றைய கால கட்டத்தில் காதல் என்ற பெயரில் பல விபரீதங்கள்,தற்கொலைகள்,கொடூரமான செயல்பாடுகள்.பெண்ணைப் பெற்றவர்கள் பயந்தே காலம் தள்ள வேண்டிய நிலை.குறிஞ்சிக் கலியில் ஒரு பாடல்.நாடகக் காட்சி போன்று.தான் விரும்பும் பெண்ணை 2,3நாட்களாகப் பார்க்க இயலவில்லை,அந்தப் பையனுக்கு.பார்க்கும் ஆவலில் வீட்டிற்குச்செல்கிறான்.உள்ளே செல்லமுடியாத வகையில் பெண்ணின் தாயும் இருக்கிறாள்.என்ன செய்வது?வாசலில் இருந்தே பருகுவதற்கு நீர் கேட்க யதார்த்தமான தாயும்,நீர் கொடுக்கச் சொல்கிறாள்,மகளிடம்.நீர்ச் சொம்புடன் கையையும் சேர்த்துப் பிடித்து விடுகிறான்.பயத்துடன் பெண் அலற,என்னவென்று உள்ளே இருந்து கேட்கும் தாய்க்கு,உண்ணுநீர் விக்கினான் என்று அவனைக் காட்டிக் கொடுக்காத அந்தப் பெண்ணைப் பார்த்து,'கொல்வான்போல் நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்'என்று பெண் கூறுவதாக அமைந்திருக்கும் அப்பாடல்.எங்கள் ஆசிரியைகள் இதனை நடத்தும் போதும் நாங்கள் இதனை மாணவர்களுக்குக் கூறும் போதும் ஒரு கற்பனைக் காட்சியாகத் தான் நினைத்து ரசித்திருக்கிறோம்.இலக்கியச் சுவைக்கு இதுபோன்ற நிகழ்வுகள் வாழ்க்கையுடன் ஒன்றி இருப்பதனைப் பார்க்க முடிகிறது.காமம் என்ற அன்பை உணர்த்தும் சொல் இன்று வேறு பொருளைத் தருகிறது.அதுபோல் வாழ்க்கை முறைகளும்,நெறிகளும் இன்றைய நிலையில் வேறு விதமாகப் புரிந்து கொள்ளப் பட்டிருப்பதும் வேதனைக் குரியது.  


Saturday 9 February 2013

islaamiyarkalin en anubavangal

சென்ற வாரங்களில் விஸ்வரூபம் படம் பற்றிய செய்திகள்;சர்ச்சைகள்.நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே முஸ்லிம் பையன்,பெண்களுடன் பழகி இருக்கிறேன்.கல்லூரிக் காலங்களில் பெண் நண்பி இருந்திருக்கிறார்.முதுகலை வகுப்பில் ஒருவர்(பெயர் உமர் கதாப்)இருந்தார்.எல்லோரிடமும் இயல்பான நிலையில் தான் பழகி இருக்கிறோம்.இந்து,முஸ்லிம் என்ற எந்த வேறுபாடும் தெரியாது.பெயரில்மட்டும் தான் வேற்றுமை.மற்றபடிவீட்டுக்கு வருவது,பழகுவது,ஏன் பெற்றோர் கூட வேற்றுமை கற்பித்ததில்லை.ஆனால்பள்ளியில் ஒருநாள் ஆசிரியர் களாகிய நாங்கள்,'இந்தியாவின் monsester மும்பை,தமிழ்நாட்டின் monsester கோயம்புத்தூர்' என்றுசொல்லிக் கொண்டிருக்கும் பொழுது,இரண்டு இடங்களில் தான்,அடிக்கடி குண்டு வெடிப்பு நிகழும் என்று ஒரு ஆசிரியை வேடிக்கையாக நினைவு படுத்தினார்.நிகழ்த்தியவர்கள்,குறிப்பிட்ட ஒரு இயக்கம் சார்ந்தவர் களாக அல்லவா இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.அன்றாடம் பழகிக் கொண்டிருப் பவர்கள் வேறு,இவர்கள் வேறு என்று சாதாரணமாக நினைத்துக் கொள்வேன்.காந்தகார் விமானக் கடத்தல்,ஒரு தம்பதியருள் கணவனைக் கொன்றது,அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்,தாஜ் ஹோட்டல் தாக்குதல்,அரபு நாடுகளிலுள்ள தண்டனைச் சட்டங்கள்,சமீபத்தில் இளம்பெண்ணின் தலைத் துண்டிப்பு இவையெல்லாம் இடர்ப் பாடான ஒரு மனநிலையை என்னுள் தோற்றுவிக்கும்.மதன் எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்'படித்ததன் பாதிப்பு,இப்படித் தான் போலுமிவர்களின் நீதி முறை என்று நினைத்துவிட்டு விடுவேன்.அதனால் இன்றளவும் இசுலாமிய மக்களுடன் பழக்கம் சாதாரண மாகத்தான் இருக்குமே தவிர ஒரு வேறுபாடும் தோன்றியதே இல்லை.இவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களின் இனம் என்று சிறிதளவும் தோன்றவே தோன்றாது.அவர்களும் எந்த ஒரு மரியாதைக் குறைவாகவும் பேசியதே இல்லை.திரைப்படக் காட்சிகள் எப்படி இருக்குமோ நான் பார்க்கவில்லை.எத்தனையோ தி  ரைப் படங்கள்                 சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கின்றன.(அரங்கேற்றம் திரைப்படம்)படம்,பாடம் கற்பிப் பதாக அமைவதுண்டு.ரசிகர்களின் மனநிலையைப் பொறுத்துத் தான் அவை அவ்வாறு ஏற்றுக் கொள்ளப் படும்.தற்பொழுது நடக்கும் செயல்களுக்கு ஏற்ற வகையில்தான் திரைக் கதைகளும்,காட்சிகளும் அமைகின்றனவோ?என்னவோ!'இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி'என்பார்கள்.இதற்கும் பொருந்துமோ?யாரோ ஓரிருவர் சில கொடூரங்களை செய்கிறார்கள் என்பதற்காக நாம் அந்த இனத்தவரையே இழிவாகப் பார்க்கிறோமா என்ன?இல்லையே!அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த சர்ச்சை களும்,குழப்பமும் என்பது புரியவில்லை.இன்னும் வருங்காலங்களில் என்னென்ன வருமோ!

Wednesday 6 February 2013

balakumaranin UDAYARm andanarkalin en pazaya ninaivukalum.

பாலகுமரனின்  உடையார் 4பாகங்களைப் படித்து முடித்து விட்டேன்.அவற்றுள் பரவலாக அந்தணர்கள் குறித்த பல நிகழ்வுகள் வருகின்றன.அவற்றைப் படிக்கும் பொழுது என் சிறிய வயது நினைவுகள்....எங்கள் ஊரில் அக்ரஹாரம் இருந்தது.அந்தத் தெருவில் ஒரு 30,40குடும்பங்களும் ,20வீடுகளும் இருந்தன.மிக அமைதியாக பெயருக் கேற்றபடி இருக்கும்.வாசலில் செம்மண் கோலம்,நீளமான வீடுகள்,அவரவர் வசதிக் கேற்ற வகையில் உள் குடித்தனங்கள்,தனிவீடுகள்,ஒருசில அரசு அலுவலர்கள் (2,3,பெண்களும் அரசாங்க வேலை பார்த்தார்கள்) என்று அந்தத் தெருவுக்கே உரிய அந்தஸ்துடன் இருக்கும்.(இன்று பெயர் மட்டும்தான் இருக்கிறது.முஸ்லிம்கள் நிறைய பேர்கள் வீடுகளை remodel செய்து வசித்துக் கொண்டிருக் கிறார்கள்.அது வேறு விசயம்)என்  வகுப்பில் படித்தவர்கள் பரவலாக இருந்தனர்.அவர்களுடன் நாங்கள் வீட்டிற்குள் போக அனுமதிக்க மாட்டார்கள்.நாங்கள் சூத்திரவாளாம்.(அவர்கள் மொழியில் என்ன பொருளோ?)பிறகு ,அவர்கள் பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முற்றம் போன்ற இடத்தில் குளித்து உடை மாற்றினால் தான் உள்ளே அனுமதிப்பார்கள்.நவராத்திரி நேரத்தில் கொலு வைத்திருப் பார்களே!சிறுவர்,சிறுமி களாகிய நாங்கள் வெளியில் நின்றுதான்,ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு வருவோம்.எங்கள் வீடுகளில் கொலுவெல்லாம் வைப்பது பழக்கம் இல்லையே!அதுவுமல்லாமல் எங்களுக்கு ஒரு entertainment ம் கூட!அப்புறம் ஆற்றுக்குக் குளிக்கப் போகும் பொழுது,குளித்து விட்டுவரும் சில வயதான முக்காடிட்ட பாட்டிகள்,'தள்ளிக் கோடி' என்று எச்சரிக்கை ஒலியுடன் வருவார்கள்.குளிக்காத நாங்கள் அவர்கள் மேல் லேசாகப் பட்டு விட்டாலும் தீட்டாம்.இன்னும் பழைய காலத்தில் அவர்கள் இருக்கும் தெருவில் செருப்போ,மேல் சட்டையோ போட்டுக் கொண்டு போகக் கூடாதாம்.சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.எங்கள் ஊரின் taluk கத் தலை நகரில் ஒரு பஸ் கம்பெனி இருந்தது.அதில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பிற இனத்தவர் ஆகவும்,இருக்கையில் அமர்ந்து கணக்குகளைப் பார்ப்பவர்கள் அவர்களாகவும் இருப்பார்கள் என்றும்,கல்லூரியில் இரு பானைகளில் குடிநீர் வைத்திருப் பார்கள் என்று தன் நேரடி அனுபவமாக,என் முதுகலை வகுப்பு ஆசிரியரால் சொல்லக் கேட்டிருக்கிறோமே!அது மட்டுமல்ல.எங்கள் அப்பா எங்களை சிறு வயதில் காபி கிளப் க்கு அழைத்து செல்லும் பொழுது,'இது பிராமிணர்கள் சாப்பிடும் இடம்'என்று எழுதி இருப்பதைப் பார்த்து நாங்கள் வேறு மாதிரியாக உச்சரித்து சிரிப்போம்.பாலகுமாரன்,தன் நாவலில் முன் குடுமி வைத்த அந்தணர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்.கேரளா வுக்குச் சென்றால் அவர்களின் பழம் சரித்திரக் கதையைக் கூறுவார்களோ,என்னமோ?என் பையன் புலியூர்க் குறிச்சியில் தங்கிப் படித்தபோது ஒருசில,அவர்களின் குண அதிசயங்களைக் கூறியிருக்கிறான்.ஒரு முறை எங்கள் ஊரில் ஒரு மாட்டு வண்டி ஊர்வலம் நடந்தது.அதில் ராமர்கடவுள் போன்று வேறு சில கடவுளர்களின் வேடமிட்டு கழுத்தில் செருப்பு மாலையுடன் சென்றனர்.விவரம் புரியாத வயதில் எனக்கு,அது இனம் புரியாத உணர்வாக இருந்தது.இன்று காலம் எத்தனை மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது! ஒன்றை சொல்லியாக வேண்டுமே! நான் P.G.படிக்கும் பொழுது என்னுடன் படித்த இன்னொரு பெண்.அவளது வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிடவெல்லாம் செய்திருக்கிறேன்.அவளும் எங்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறாள்.ஆனால் அவர்கள் வசித்தது ஒரு ஒண்டுக் குடித்தனம்.

Tuesday 5 February 2013

FIAT KAARUM EN KANAVARUM


பண்ணையாரும் பத்மினியும் குறும் படத்தை சினிமா ஆக்கப் போகிறார்களாம்.அது என்னபடம்?!எங்கள் வீட்டில் இருக்குதே ஒரு பியட்.மாடல் M D O 8064.அதன் வருடத்தை சொல்லத் தேவை இல்லை.அந்த காருக்கு ஹீரோ என் கணவர்.என் கணவருக்கு heroine,தர்மபத்தினி எல்லாமே அந்தக் கார்தான்.இப்படிச் சொல்றதுனாலே புதுக் காரா அப்போ வாங்கி இருப்பாரோ என்று பெருமையா நினைத்தீங்கன்னா நான் பொறுப் பில்லை.அந்தக் கார் owner 30 வருஷம் அதை ஓட்டி வெறுத்துப் போய் வித்துட்டுப் போனதை இவர் ஒரு புரோக்கர் மூலமா வாங்கிகிட்டு வந்து பெருமை பீத்திக் கிட்டார்.
அப்போ என்பெண் 11ஆம்வகுப்பும் ,பையன் 8ஆம் வகுப்பும் படிச்சிட்டு இருந்ததாலே அவங்க ஒண்ணும் பேசலை.அப்பாவை எதிர்த்துப் பேசும் அளவுக்குஅவங்க இல்லை.எனக்கு அந்தக் காரைப் பார்த்து வெறுப்பு ஒரு பக்கம்,இந்த மனிதர் இப்படித் தான் தோன்றித் தனமாகச்செயல் படுகிறாரே என்ற கோபம் ஒருபக்கம்.அது கிடக்க.அந்தக் காரில் எங்கள் குடும்பம் போனது என்பதை விட நாங்கள் நால்வரும் அந்தக் காரைத் தள்ளி இருப்பது தான் அதிகம். 
இன்றளவும் அந்தக் காரைக் குறித்து கேலி பேசாதவர்கள் கிடையாது.எங்கள் தெருவில் வயதான முஸ்லிம் அன்பர் ஒருவர் அந்தக் காருடன் போராடுகின்ற எங்களிடம் அனுதாபப் பட்டு ,இந்தக் காரை விற்று விடுங்கள் சார்.இதுபோன்றொரு பழைய மாடல் க்கு இப்படிச் செலவு செய்கிறீர்களே என்று கூறிப் பார்த்தார்.ஊஹூம்....அவரின் காலம் முடிந்து அவர்தான் இறந்து விட்டார்.பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி கை,கால் முடியாதவர்.அவரும்,சார் ஏன் இந்தக் காரை வைத்துக் கொண்டு சிரமப்பட வேண்டும்?என்று கூறி என் கணவரின் கோபத்திற்கு ஆளானது தான் மிச்சம்.
ஒரு முறைபழைய பேப்பர் காரர்,வழக்கமாக வருபவர் ,இந்தக்காரை 16000ரூபாய்க்கு நான் எடுத்துக் கொள்கிறேன்.அதில் உள்ள parts அந்த மதிப்புக்குத் தான் இருக்கும்.என்று யதார்த்தமாகக் கூறினார்.அவ்வளவு திட்டு அந்த பேப்பர் காரருக்கு.அதிலிருந்து என் கணவர் இல்லாத நேரம் பார்த்துத்தான் பழைய பேப்பர் காரரையே கூப்பிடுவது.இந்தக்காரை எடுத்துக் கொண்டு தான் ஏர்போர்ட் க்குப் போக வேண்டுமா என்று அதை ரிப்பேர் பார்க்கும் mechcanic கூட ஒரு முறை திட்டி அனுப்பி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரைக் கூட எவ்வளவு வெறுப்பேற்றி இருக்கிறது என்று.
பழைய மாடல் கார் exhibition வைப்பார்களே அதற்கு அனுப்பலாமோ?ஆனால் என் கணவர் அதையும் ஒத்துக் கொள்ளமாட்டார்.இப்பொழுதும் இதை 2லட்சத்துக்குக் கேட்கிறார்கள் கேக்குறாங்க ,குடுத்துடவா என்று மிரட்டுவார்.நான் பேசாமல் இருந்துடுவேன்.ஏன்னா வேற ஏதாவது விளைவு அல்லது என் பெண் புதியதாக வாங்கிய ஸ்விப்ட் பெட்ரோல் ல் காஸ் பயன் படுத்தி ஓட்ட ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?இப்படிஎல்லாம் சொல்வதனால் பியட் எதற்கும் பயன்பட வில்லையோ என்று ஐயுற வேண்டாம்.இதற்கு நான் விளக்கம் சொல்வதை விட அதில் நாங்கள் பயணிக்கும் பொழுது என் கணவரின் முகத்துப் பெருமிதத்தை பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.என் பையன் ஓட்ட அவர் பக்கத்தில் உட்கார்ந்து வர...தேர் பவனி தோற்றுப் போகும்.ரொம்ப ஸ்பீட் போகாதாமில்லே.என் பையன்தான் சொன்னான்.வேற எதாவது கார்லே போகக் கூடிய சந்தர்ப் பத்தில், நல்ல காராகவே இருந்தாலும் , நம்ம பியட் மாதிரி வருமா என்று புளகாங்கிதப்பட்டுக் கொள்ளும் என் கணவரின் பெருமிதமான மனம்...கீழ் வீட்டில் குடி வந்திருக்கும் இளைஞர் களிடம்.இந்தக் காரில்தான் என் பெண்ணும் பையனும் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார்கள் என்று என் பங்குக்கு நான் பெருமைப் பட அவர்கள் இதில் வேறு என்ன செய்ய முடியும் என்று ஒரே வார்த்தையில் பாராட்டினார்களே!
வாசலில் தளிர் வரும் முருங்கைக்கு ஒரு பக்க மறைவாக, மாடு வாய் வைக்காமல் இருக்க ஒரு பக்கக் காவலாய் கண கம்பீரமாய் நின்று கொண்டிருக்கும் எங்கள் பியட் இன் பெருமையைப் படமாக எடுக்க பார்ட் 1, பார்ட் 2 என்றல்லவா எடுக்க வேண்டும்.

Monday 4 February 2013

நான் சிறு வயதாக இருக்கும் பொழுது மாவு மில்லுக்குப் போவேன்.அப்பொழுதும் யாரேனும் என் வயதொத்த நண்பன் அல்லது நண்பி கூட வருவதுண்டு.கொஞ்சம் தூரத்தில் மில் இருக்கும்.அதனால் ஏதும் வாங்கித்தின்று கொண்டு போவோம்.அது ஜாலி யான ஒரு குட்டி பிக்னிக் போல.அந்த மில்லுக்கு எதிரில் ஒரு பெரிய பங்களா இருக்கும்.அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் அதுதான் பங்களா.ரொம்பப் பெரிய கட்டிடம்.சுற்றிலும் இடம் விட்டு தற் காலத்தில் உள்ள கலெக்டர் பங்களா போல் இருக்கும்.அது எம்.ஆர்.ராதாவின் பங்களா என்று எங்களுக்கு கூறப் பட்டிருந்தது.நாங்கள் போகும் பொழுதெல்லாம் எம்.ஆர்.ராதா.வருவாரா என்று ஆவலுடன் பார்ப்போம்.ஆனால் ஒருநாள் கூட பார்த்ததில்லை.உயரமாகக் கொண்டை போட்ட ஒரு அம்மாளைத்தான் பார்த்திருக்கிறேன்.அந்தப் பங்களா இன்றும் இருக்கிறது அறிவு தெரிந்ததன் பிறகுதான் எம்.ஆர்.ராதா குறித்தும் ஊருக்கு ஒரு பங்களா என்பது குறித்தும்,இன்ன பிற செய்திகளையும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது நினைத்தாலும் அறியா வயதின் ஆச்சரியமும் அறிந்த வயதின் சிரிப்பும் வேடிக்கைதான்..

parents vs children

நேற்று  நீயா?நானா?விவாத மேடை.பிள்ளைகள் vs பெற்றோர்கள்.கணேஷ் சிறு வயதில் எப்பொழுது கடைக்குக் கூட்டிக் கொண்டு போனாலும் கார் பொம்மை மட்டும் தான் கேட்டு அழுவான்.ஆம்.அடம் பிடித்து அழுவான்.அழுவான் என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவும்.ஒருமுறை உங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ராஜராஜன் theatre க்குச் சென்றேன்.அப்பொழுது highways ஆபீஸ் ல் என்னுடன் வேலை பார்த்த மோகனாவும் வந்தார்.சாப்பாடெல்லாம் எடுத்துக்கொண்டு அரை நாள் ஆபீஸ் ல் இருந்துவிட்டு theatre ல் வெளியில் வைத்து சாப்பிட்டு விட்டு படம் பார்த்து விட்டு வந்தோம்.என்ன படம் என்று நினைவில் இல்லை.கணேஷ் ஒழுங்காகப் படம் பார்க்க மாட்டான்.அன்று.எப்படி படம் பார்த்தான் என்பதும் நினைவில்லை.ஆனால் thatre லிருந்து படம் முடிந்து வெளியில் வந்ததிலிருந்து busstand வரும்வரை கார் பொம்மை கேட்டு அழுது கொண்டே வந்தான்.எனக்கு கோபமான கோபம்.வந்தால் வா இல்லையென்றால் போடா என்று அவனை விடவும் முடியாது.கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுதான் busstand வந்து சேர்ந்தேன்.ரம்யா இதில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாது போல அமைதியாக வருவாள்.கணேஷ்க்கு இந்த கார் பைத்தியம் அவன் 9ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நிஜக் கார் ஓட்டினதன் பிறகு தான் தெளிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Sunday 3 February 2013

markazi half yearly exam

நான் 6,7ஆம் வகுப்பு படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன்.எங்கள் அப்பா அதி காலையில் எழுப்பி படிக்கச் சொல்வார்.ஏன்னா மார்கழியும் half yearly எக்ஸாம் உம் ஒன்னா வர்ற நேரமும் அப்பதான்.எழுந்துகிறதுக்கு சோம்பலாகவும் குளிராகவும் இருக்கும்.ஆனா எழுந்திரிச்சி பல் தேய்ச்சி கொஞ்ச நேரம் படிக்கிறா மாதிரி படிச்சிட்டு ஆற்றுக்கு குளிக்க கிளம்பிடுவோம்.போற வழியிலே தான் முனியாண்டி கோவில் இருக்கு.6மணிக்குள்ளே கோவிலுக்குப் போயிட்டோம் ன்னா சூடா வெண்பொங்கல் தருவாங்க.அதை வாங்குறதுக்கு தான் சீக்கிரமே எழுந்திருக்கிற டிராமா ல்லாம்.இன்னொன்னு சூரியன் வர்றதுக்கு முன்னாடி ஆற்றுநீர் சூடா இருக்கும்.இந்த பொங்கல் வாங்குற ஐடியா ல்லாம் பக்கத்து வீட்டு ராஜுவும் எனக்கு ஒரு அண்ணன் இருக்காரே இவங்க 2பேரும் தர்றதுதான்.அந்தக் கோவிலில் தான் திருப்பாவை,திருவெம்பாவைப் பாடல்கள் ஒலிக்கும்.இப்பொழுதும் கோவில் இருக்கிறது.ஆனால் பொங்கல் வாங்க எங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ?என்ன பாடல்கள் போடுகிறார்களோ!ஏன்னா இப்ப யாரும் ஆற்றுக்குப் போய் குளிப்பதே இல்லையே!ஆறே பாழ்பட்டுக் கிடக்கிறது.ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள்.அந்த ஆறே இன்னைக்கு பாழ்பட்டுக் கிடக்கிறது.நல்லபல வழக் கங்களை யும் எனக்கு எங்கள் ஊர்தான் கற்றுக் கொடுத்தது என்பதை நான் பெருமை யாக சொல்லிக் கொள்ளத் தான் வேண்டும்.

Saturday 2 February 2013

இன்ஜினியரிங் படித்த பெண்கள் ரொம்ப ராங்கி பிடித்தவர்களாக இருப்பார்களோ என்று  எனக்குத் தோன்றும்.பையன்கள் அப்படி இல்லை.என்னமோ இங்கிலிஷ்ல் பேசிக் கொள்வதும் மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்கிற பாவனையில் நடந்து கொள்ளும் மிடுக்கும் அவர்களிடம் சாதாரணமாகப் பேசலாம் என்ற மனோபாவத்தைத் தகர்த்து விடும்.என் பெண் கூட அவளுக்கு அம்மா என்பதனால் தான் என்னுடன் சேர்ந்து வருகிறாளோ என்று கூட நான் நினைத்துக் கொள்வேன்.ஒருமுறை நான்பணி முடிந்து,என்பெண் கல்லூரி முடிந்து டவுன்பஸ் க்காகக் காத்திருந்தோம்.அப்பொழுது என்கையில் காய்கறி கொண்ட துணிப்பை இருந்தது.நான் துணிப்பை வைத்திருக்கிறேன்.அதனால் உனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?என்று கேட்கும் அளவுக்கு என் மனதில் ஒரு காம்ப்ளக்ஸ்.ஒரு முறை நான் busstand ல் நின்று கொண்டிருந்தேன்.எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருகின்ற என் பெண்ணின் நண்பி என்னைப் பார்த்தும் தெரியாதவள் போல சென்று விட்டாள்.அதனால் இப்பொழுதும் எந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் என்றாலும் பார்த்துத்தான் பேசவேண்டி இருக்கிறது.என் குணம் பொதுவாக பிறரின் சுபாவம் அறிந்து பேசுதல்.அப்படி என்பதனால்தான் இப்படி நினைத்துக் கொள்கிறேனோ என்னவோ!

Friday 1 February 2013

இல்லை கணேஷ்!இப்படி நான் பார்த்ததே இல்லை.வேறு முறையில் சொல்வார் களே தவிர கதைப் பகுதியில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.இது கதை ஆசிரியருக்கும் இழுக்கு.அத்துடன் இந்தக் கதை ஆசிரியரும் பிரபலமானவர்.

Thursday 31 January 2013

நேற்று குங்குமம் வார இதழில் ஒற்றைத் தோடு என்ற ஒரு சிறு கதையைப் படித்தேன்.மாத்தளை சோமு என்பவரின் கதை.இலங்கைத் தமிழரின்,ஒரு சிறுமியின் அவல நிலை அந்தக் கதையின் முடிவு.படித்து முடித்தவுடன் அது போல் ஒரு சிறுமி நம்மைத் தேடி வந்தால் நாம் ஆதரிக்கலாமே என்று ஒரு கணம் அனுதாபப் பட்டேன்.அது கதை தானே என்று விட்டுவிட்டேன்.ஆனால் இது போன்ற நிகழ்வுகள் இலங்கையில் நடக்கிறது போலும் என்று வருத்தமாக இருந்தது:மனதில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தியது.ஆனால் இன்று குமுதத்திலும் அதே கதை வெளியாகி இருந்தது.கதை ஆசிரியர் காசு பார்க்கி ராரோ?இதழ்கள் இப்படி எல்லாம் கவனக் குறைவாக செயல் படுமா என்றெல்லாம் எனக்கு ஆச்சரியமாகப் படுகிறது.

Wednesday 30 January 2013

இப்பொழுது இருக்கும் இளம் பருவத்தினருக்கு நடைப் பயிற்சி என்பதே இல்லாமற் போய் விட்டது எனலாம்.எதற்கும் வண்டிதான்.போதாக் குறைக்கு பள்ளிப் பருவத்திலேயே விலையில்லா சைக்கிள் வேறு.நான் பள்ளி,கல்லூரிக்குச் செல்லும் பொழுதெல்லாம் நடைப் பயணம் தான்.ஒரு விதத்தில் நன்மை என்றாலும் கால விரயம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.ஆனால் வசதிக்கேற்ப இக்காலத்தினருக்கு அலட்சியம்,பயமின்மை வந்துவிட்டிருக்கிறது.தற்பொழுதும் கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகள் வெகு தூரத் திலி ருந்து நடந்து வருவதைப் பார்க்க முடிகிறது.இந்த முரண்பாடுகள் அவரவர் வீட்டுச் சூழலைப் பொறுத்துத் தான் அமைகிறது.ஏனென்றால் குடும்ப வறுமை,பெற்றோரின் பொறுப்பின்மை இவையும் அறியாமையும் கூட காரணம் எனலாம்.நான் பணியாற்றிய பள்ளி பெரும்பாலும் வறுமை,அறியாமை ஆகிய சூழலில் பயில வரும் பெண்பிள்ளைகள் நிறைந்த பள்ளி.6ஆம் வகுப்பில் படித்தசிறுமியின் பெற்றோர் அவளுக்குப் பிடிக்காத சூழ்நிலை கொண்ட உறவினர் வீட்டில் தங்கவிட்டு வேறு ஊருக்கு தொழில் புரியச் சென்றுவிட்டனர்.அந்தப் பெண் வகுப்பில் இருக்கும் பொழுதெல்லாம் தனக்குப் பேய் பிடித்திருப் பதாக வகுப்பு ஆசிரியையை பயமுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறாள் அவரும் எங்களிடம் ஆசிரியர் அறையில் வந்து கூறிக் கொண்டிருப்பார்.மேல்நிலை வகுப்புக்கு மட்டுமே செல்லக் கூடிய ஆசிரியர்களாகிய நாங்கள் அவளை அழைத்து எதுவுமே காட்டிக்கொள்ளாமல் இன்று மதியம் என்ன பாடம் உன் ஆசிரியை நடத்து கிறாரோ அதை எங்களிடம் வந்து சொல்கிறாயா என்று அன்புடன் கூறினோம்.அன்றிலிருந்து அவளது மனநிலையும் மாறியது.பிறகு ஒரு முறை அவளின் பெற்றோரை அழைத்து அவரது வகுப்பாசிரியர் அறிவுரை கூறி அனுப்பினார்.இது போன்று உளவியல் ரீதியாக மாணவிகளை அணுகிய அனுபவம் நிறைய உண்டு..

Tuesday 29 January 2013

நேற்று ஒரு வார இதழில் வடமாநில த் தொழிலாளர்களின் கூலி மற்றும் இதர வசதிகள் குறித்து கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.அடிப்படைத் தேவைகளுக்காக தம் இருப்பிடம் மற்றும் உறவுகளை விட்டு இங்கு வந்து உழைக்கின்ற அவர்களின் வாழ்வுப் பொருளா தாரத்தை வேலை வாங்குபவர்களும் வேலைக்கு அழைத்து வருபவர்களும் ஏன் இப்படி நசுக்குகிறார்கள் என்பது மிக்க வேதனையை அளிக்கிறது.இந்த அரசும் இதற்கென ஒரு தனித் துறையை ஏற்படுத்தக் கூடாதா என மனம் ஏங்குகிறது.நானும் என் கணவரும் கடந்த 2011ஆகஸ்டில் ராஞ்சி சென்றோம்.அப்பொழுது எங்கள் ரயில் பெட்டியில் இரு தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.25வயதிற்குள் தான் இருக்கும்.அதில் ஒருபையன் ஆந்திரா எல்லையில் ஏறப்போகும் ஒருவரின் பெர்த்தில் படுத்து வந்தானோ என்னமோ தெரியவில்லை.2மணி அளவில் t.t.r.ன் சத்தம்.கண் முழித்து என்னவென்று பார்த்தால் அந்த வட மாநிலபையனின் பெட்டிகளை ரயில் பெட்டியின் ஒரு மூலையில் எறிந்து அவனை அந்த T.T.R.அவ்வளவு திட்டு.பாவம் அந்த பையன்.விடிந்ததும் நான் எனக்கு தெரிந்த,அவனுக்குப் புரியும் ஆங்கிலத்தில் ஏன் reserve செய்யாமல் ஏறினாயா எனக் கேட்டேன்.அவன் தன் டிக்கெட் டைக் காண்பித்து reserve செய்திருக்கிறேன் பாருங்கள் என்று காண்பிக்க வந்தான்.அதைப் பார்த்து நான் என்ன செய்ய முடியும் என்பதனால் பேசாமல் இருந்து விட்டேன்.T.T.R.டம் போய் கேட்க துணிவு மற்றும் ஹிந்தி பேச வேண்டுமே?என்ன செய்வது?இது போன்ற அநியாயங்களைக் கண்டு மனம் வருந்த மட்டுமே முடிகிறது.

Thursday 24 January 2013

நேற்று பக்கத்து வீட்டு 3ஆம் வகுப்பு படிக்கும் பெண் பள்ளி வாகனத்திலிருந்து வீட்டு வாசலில் வந்து இறங்கினாள் என் எண்ணங்கள் என் பிள்ளைகளின் பள்ளிப் பருவத்தை நோக்கி சென்றது.4ஆம் வகுப்பு படிக்கும் என் பெண் u k g படிக்கும் என் பையனை மிகப் பொறுப்புடன் அழைத்து வருவது மட்டுமல்லாமல் நாங்கள் கணவன்,மனைவி இருவரும் அலுவலகத்திலிருந்து வரும்வரை பொறுமையுடன் பார்த்துக் கொள்வதும் எங்களுக்கு பெண்ணின் மீதான நம்பிக்கையை வலுப் படித்தி யது.காலம் என்ன மாற்றங்களை செய்கிற து



என் பையன் எல்.கே.ஜி.பெண் 3ஆம் வகுப்பு படிக்கும் பொழுதி லிருந்தே இருவரும் ஒற்றுமையுடன் சென்று வருவார்கள்.பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.எனவே தம்பியை மிகப் பொறுப்புடன் என் பெண் கவனித்துக் கொண்டாள்.அததுடன் இயல்பாகவே பொறுமை யானவளும் கூட.இருவரும் சேர்ந்தே ஹிந்தி வகுப்பிற்கும் செல்வர்.ஒருநாள் கூட பையனை பார்த்துக் கொண்டதில் அவள் சலித்துக் கொண்டதே இல்லை,அவனைப்பற்றிக் குறை கூறியதாகவும் நினைவில்லை.காலப் போக்கில் என் பையனுக்கு அவளை சார்ந்திருக்கும் நிலை பிடிக்கவில்லை போலும்.அல்லது ஆண்பிள்ளைக்கே உரிய சுபாவமோ அவன் 8ஆம் வகுப்பு படிக்கும் பொழுது அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பித்து விட்டது.என் பெண்ணும் தன் 7ஆம் வகுப்பு முதல் cycle ல் செல்ல ஆரம்பித்தாள்.அதுவும் ஒரு காரணம்.பையன் தன் படிப்பு தொடர்பாகக்கூட என் பெண்ணை சந்தேகம் கேட்கமாட்டான்.தனித்து நிற்க வேண்டும் என்ற அவனின் எண்ணம்தான் காரணமோ என்னமோ?சிறு வயது முதல் பொருட்களை பாதுகாக்கும் கவனம் என் பெண்ணுக்கு இருக்கும் அளவு பையனுக்கு இருந்ததில்லை .ஆனால் தற்சார்பு நிலை அவனுக்கு அதிகம் வந்தது தான் எனக்குஆச்சரியம்.

Tuesday 22 January 2013

இன்றைய செய்தித்தாளில் பயிற்சி ஆசிரியர்களிடம் நன்கொடை கட்டாய வசூல் குறித்து படிக்க நேர்ந்தது.ஒரு பிரியம்,நன்றி இவற்றின் காரணமாகத்தான் பயிற்சி ஆசிரியர்கள் ,வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ,தலைமை ஆசிரியர்களுக்கும் பொருட்களை தந்து விடை பெறுகின்றனர் .நான் 1982ஆம் வருடம் ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 30நாட்கள் பயிற்சி எடுத்தேன்.முடிந்து என் கணவரின் பணி மாற்றல் காரணமாக சாத்தூர் செல்ல வேண்டி தலைமையாசிரியரிடம் சொல்லிக்கொள்ள சென்ற என்னிடம் ஒரு மூட்டை மிளகாய் கேட்கிறார் .நான் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டேன்.ஆனால் நான் பணி புரிந்த பொழுது என்னிடம் பயிற்சி பெற வந்த ஆசிரியர்கள் நான் விரும்பாமலே ஒருசில பொருட்களை தந்து சென்றனர்.காலப்போக்கில் கடுமையாக மறுக்க வேண்டி வந்தது.பிறிதொரு ஆசிரியைக்கு ஒரு பயிற்சி ஆசிரியர் வெளிநாட்டு கெட்டில் என்று பொருளைக்கொடுத்தார்.அவர் வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு எடுத்துச்சென்றார்.அது வேலை செய்யவில்லை .மிக்க அவமானத்துடன் மீண்டும் பள்ளிக்கே கொண்டுவந்து கொடுத்தவரை தேடிப்பிடித்து எடுத்துப் போகசசொல்லி கெஞ்சினார் அது பலநாட்கள் பள்ளியில் கிடந்தது.கேட்டுப்பெறுகிற மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்களும் உண்டு பயிற்சிக்கு வராமலே பணம் கொடுத்து கையொப்பம் பெறுபவர்களும் உண்டு.அநியாயம் .

Monday 21 January 2013

நான் தமிழில் முது கலைப்பட்டமும் ஆசிரியப் பயிற்சி யில் முதுகலைப்பட்டமும் பெற்று பதினான்கு ஆண்டுகள் நெடுஞ் சாலைத் துறையில் பணியாற்றி பின்னர் முதுகலை ஆசிரியப் பணிக்கு அரசுப் பள்ளியில் சேர்ந்தேன் .புதியதாக சிலப்பதிகாரம் ஒரு செய்யுள் பகுதி எடுக்க வேண்டிய நிலையில் நாளங்காடி,அல்லங்காடி,சதுக்கபூதங்களைக் குறித்து விளக்கும் பொழுது ,ஒரு மாணவி எழுந்து ,தப்பு செய்த கோவலனை அந்த  பூதம் ஏன் கொல்லவில்லை என்று கேட்டாள் .எதிர் பாராத இந்த கேள்வியால் ஒரு நிமிட தடுமாற்றம் என்றாலும் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற உண்மையின்படி அவன் கொல்லப்பட வேண்டும் என்பதனால்தான் இளங்கோவடிகள் அவனைக் கொல்லாமல் கதாநாயகனைக் கதையுடன் கொண்டு சென்றார் என்று கூறி சமாளித்த என் மூளையை நானே பாராட்டிக் கொண்டேன்