Monday 29 April 2013

manivilaa.

மணிவிழா எனும் 60ஆம் கலியாணம் குறித்துக் கூறும் பொழுது மு.க.ஸ்டாலின் பற்றிப் படிக்க நேர்ந்தது. அவருக்குப் பெயரன்,பெயர்த்திகள் பிறந்து பின் அந்தத் திருமணம்.அதைவிட கருணாநிதியை நினைத்தால் இன்னும் ஆச்சரியம்.தன் மகனின் 60யையே பார்க்கிறாரே!எனக்கு நினைவு தெரிந்து இந்த அம்மா திருமணம் செய்து வந்த புதிதில், பட்டு வேலை செய்து வந்த முதலியார் ஒருவரின் 60ஆம் திருமண த்தி ற்கு,வேறு சில மகளிருடன் சேர்ந்து சென்றோம்.[என் சிறு வயது அறிவு அவரை முதலாளி என்று நினைத்தது.ஆனால் இனத்தில் முதலியாரைத் தான் அவ்வாறு குறிப்பிட்டிருப் பார்கள் போலும்.இன்றும் அந்த வீடு பணக்கார தோரணையில் தான் இருக்கிறது.]அவர் தன் மனைவியுடன் திருமணக் கோலத்தில் கையில் விபூதித் தட்டுடன் நின்று ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தார்.எல்லோரும் வரிசையில் நின்று தட்டில் காசோ பணமோ போடுவதும் ,அவரிடமிருந்து பய பக்தியுடன் வணங்கி விபூதி பெறுவதும் எனக்கு புதுமையான நிகழ்ச்சி.இன்னும் சில வருடங்கள் கழிந்ததும் எங்கள் வலப் பக்கத்து வீட்டுக் காரருக்கு 80 திருமணம்.சல்லடையில் மணமக்களுக்கு நீர் ஊற்றினார்கள்.[அந்தக் குடும்பம் சரியான கருமிக் குடும்பம்.இந்தக் கஞ்சத் தினால் அவர் பையனுக்குத் திருமணம் செய்த சேலத்துப் பெண் சொல்லாமல் பிறந்த வீட்டுக்கே போய் விட்டது தனிக் கதை.]இவர்கூட இவ்வாறெல்லாம் செய்து கொள்கிறாரே என்று எனக்கு கேலி கலந்த ஆச்சரியம்.அப்பொழுதெல்லாம் அவ்வளவாக சிந்திக்கத் தெரியாத வயது.கேலியும் சிரிப்பும் தான் வாழ்க்கை.எனவே மகிழ்ச்சி யாக கேலி செய்து பொழுது போக்குவோம்.சமீபத்தில் என் அண்ணா ஊரினரையே கூட்டி 60 செய்து கொண்டாராம்.என்னிடம் சொன்னவர் களிடமெல்லாம் 'கல்யாணம்தான் யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டார்.பாவம் இதில் அவருக்கு மகிழ்ச்சி என்றால் சரிதான்'என்றேன்.ஏனோ இந்த மாதிரிசெயல் கள் எனக்கு மகிழ்வைத் தருவதில்லை.திருமணநாள் என்பது நினைவில் இருக்கும்.கொண்டாட்டத்தில் இருந்ததில்லை.பள்ளியில் எங்கள் 25ஆவது திருமண தினம் என்று கூறி,வம்படியாக பிற ஆசிரியைகள் என்னிடம் இனிப்பு காரம் வாங்க வைத்து விட்டார்கள்.நானும் நட்பு நிலையில் இந்த சாக்கில் சாப்பிடட்டும் என்று சொல்லியே வாங்கிக் கொடுத்தேன் என் மகிழ்ச்சி எல்லாம் பேப்பர் valuvation சென்று வந்த பணத்தில் பிள்ளைகளுக்கு உடை,சிறிய அளவில் ஆபரணங்கள்,தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பதில் தான்.பணம் போதாது என்றால் என் கணவரிடம் வாதடியாவது கேட்டு அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டால் ரொம்பப் பெருமையாக இருக்கும் அவரும் பிள்ளைகள் என்றால் பெரும் பாலும் கொடுத்து விடுவார்.இதைத் தாண்டி தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்கு ஏதும் இல்லை.அப்படி யாரும் மகிழ்விக்க நினைத்தால் சங்கடப்பட வேண்டியிருக்குமோ என்னவோ?மகிழ்ச்சிக்குப் பதில் சங்கடத்தை வாங்குவது கொடுமை அல்லவா?

Wednesday 24 April 2013

eliya vaalkkai

              என்       கல்லூரிப் பருவம் மிக எளிமையான ஒன்றாக இருந்திருக்கிறது.பள்ளி வாழ்க்கை முடிந்து புகுமுக வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் ஆசிரியைகள் செய்து வரும் உடை அழகும்,பேசும் கம்பீரமும் ,நடை வேகமும் ,முக்கியமாக அவர்கள் பேசும் ஆங்கிலமும் என்னை வியக்க வைத்தது.ஓரிரு உடைகளையே மாற்றி உடுத்தும் எங்கள் ஊரின் பழக்கத்துக்கு, எளிமைக்கு இவை வியப்பை ஏற்படுத்தியதில் வியப்பொன்றும் இல்லை.எங்கள் ஊரில் இருந்து எங்கள் இனப்பெண்களில் ,கல்லூரிக்கு செல்லும் முதல் பெண் நான் தானே!எங்கள் தெருவில் இருந்த ஒருவர் ,என்னை அடிக்கடி கேலி செய்து பேசும் வார்த்தை 'என்ன படித்து என்ன ,சட்டி பானை தானே கழுவப் போகிறாய்'என்பதுதான்.{அவருக்கு படிப்பு வாசமே இல்லை என்பதுடன் திக்கித் திக்கித் தான் பேசுவார் என்பது வேறு விஷயம்.}கல்லூரிக்கு வரும் பெரும் பாலானவர்கள் உடை விசயத்தில் எளிமையாகத் தான் வருவர்.அதனால் வேற்றுமை தெரியாது.இப்படி இருக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு தயிர் விற்க வரும் ஒரு அம்மா தன் [அவளும் வேறு ஒரு கிராமத்தில் இருந்து வருபவள்.]பெயர்த்தி கல்லூரியில் படிப்பதாககவும்,5 நாட்களுக்கு 5 நிறத்தில் புடவை கேட்பதாகவும் பெருமையுடன் கூறியது எனக்கு வியப்பை தந்ததுடன் பொறாமை யாகவும் இருந்தது.அப்பொழுது கல்லூரியின் DRESSCODE புகுமுக வகுப்பில்,டிகிரி 1ஆம் வருடத்தில் மட்டும் பாவாடை தாவணி.பிறகு கட்டாயமாக புடவை தான்.புது டிரஸ் என்பது மிகக் குறைந்த விலை மற்றும் தரமாகத் தான் இருக்கும்.அந்தப் பழக்கம் தான் என்னை எளிமைப் படுத்தி இருக்கிறது.மேலும் 6,7வகுப்பு படிக்கும் வரை நெசவு வேலைக்கு சென்று [விடுமுறை நாட்களில்]காசு சேர்த்து அடுத்தாண்டு புத்தகம் ,பழைய விலைக்கு வாங்கி விடுவதற்கு அப்பா பழக்கப் படுத்தினார்.அவ்வாறு எளிய வாழ்க்கை வாழ்ந்த தனால் ,இன்றளவும் சிறப்பாக இருக்க முடிகிறது என்று நம்புகிறேன்." இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் '"என்ற வள்ளுவரின் வாக்கு வாழ்க்கைக்கு எவ்வளவு பொருந்து கிறது.

mudalaiyum moorkkanum

நான் நன்னூல் இலக்கணம் படிக்கும் பொழுது 'முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா'என்று வரும்.விடா என்று அகிறிணைப் பன்மையில் கூறப் பட்டிருக்கும்.மூர்க்கன் ஆகிய மனிதனை அகிறினையில் சேர்த்திருப்பது எவ்வளவு பொருத்தம் என்பதனை என் வாழ்வில் அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.பிறரின் உணர்வுகள் என்ன,அவர்களுக்கு தோன்றும் சங்கடங்கள் என்ன,அவர்களின் துன்பத்தில் நாம் ஏதும் உதவ முடிகிறதா,உதவ முடியாவிட்டாலும் நெருக்கடி தராத உதவியாவது செய்ய அறிவு வேலை செய்யாத இது போன்றவர்களை உயர் திணையில் சேர்க்காதது எவ்வளவு பொருத்தம்."அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை"என்று வள்ளுவரும் இது போன்றவர்களை,அறிவில்லாதவர் என்று திட்டியும்,பிற உயிர்களின் துன்பத்தை அறிந்து கொள்ளாத அறிவினால் பயனில்லை என்று கடுமையாகக் கூறியிருக்கிறாரே!  தான் ,தன் விருப்பம்,தான் நினைக்கும் எண்ணங்கள் மட்டுமே உலகம் என்ற மூர்க்கத் தனம் கொண்டவர் களெல்லாம் அகிறினை அன்றி வேறென்ன?