Monday 29 April 2013

manivilaa.

மணிவிழா எனும் 60ஆம் கலியாணம் குறித்துக் கூறும் பொழுது மு.க.ஸ்டாலின் பற்றிப் படிக்க நேர்ந்தது. அவருக்குப் பெயரன்,பெயர்த்திகள் பிறந்து பின் அந்தத் திருமணம்.அதைவிட கருணாநிதியை நினைத்தால் இன்னும் ஆச்சரியம்.தன் மகனின் 60யையே பார்க்கிறாரே!எனக்கு நினைவு தெரிந்து இந்த அம்மா திருமணம் செய்து வந்த புதிதில், பட்டு வேலை செய்து வந்த முதலியார் ஒருவரின் 60ஆம் திருமண த்தி ற்கு,வேறு சில மகளிருடன் சேர்ந்து சென்றோம்.[என் சிறு வயது அறிவு அவரை முதலாளி என்று நினைத்தது.ஆனால் இனத்தில் முதலியாரைத் தான் அவ்வாறு குறிப்பிட்டிருப் பார்கள் போலும்.இன்றும் அந்த வீடு பணக்கார தோரணையில் தான் இருக்கிறது.]அவர் தன் மனைவியுடன் திருமணக் கோலத்தில் கையில் விபூதித் தட்டுடன் நின்று ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தார்.எல்லோரும் வரிசையில் நின்று தட்டில் காசோ பணமோ போடுவதும் ,அவரிடமிருந்து பய பக்தியுடன் வணங்கி விபூதி பெறுவதும் எனக்கு புதுமையான நிகழ்ச்சி.இன்னும் சில வருடங்கள் கழிந்ததும் எங்கள் வலப் பக்கத்து வீட்டுக் காரருக்கு 80 திருமணம்.சல்லடையில் மணமக்களுக்கு நீர் ஊற்றினார்கள்.[அந்தக் குடும்பம் சரியான கருமிக் குடும்பம்.இந்தக் கஞ்சத் தினால் அவர் பையனுக்குத் திருமணம் செய்த சேலத்துப் பெண் சொல்லாமல் பிறந்த வீட்டுக்கே போய் விட்டது தனிக் கதை.]இவர்கூட இவ்வாறெல்லாம் செய்து கொள்கிறாரே என்று எனக்கு கேலி கலந்த ஆச்சரியம்.அப்பொழுதெல்லாம் அவ்வளவாக சிந்திக்கத் தெரியாத வயது.கேலியும் சிரிப்பும் தான் வாழ்க்கை.எனவே மகிழ்ச்சி யாக கேலி செய்து பொழுது போக்குவோம்.சமீபத்தில் என் அண்ணா ஊரினரையே கூட்டி 60 செய்து கொண்டாராம்.என்னிடம் சொன்னவர் களிடமெல்லாம் 'கல்யாணம்தான் யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டார்.பாவம் இதில் அவருக்கு மகிழ்ச்சி என்றால் சரிதான்'என்றேன்.ஏனோ இந்த மாதிரிசெயல் கள் எனக்கு மகிழ்வைத் தருவதில்லை.திருமணநாள் என்பது நினைவில் இருக்கும்.கொண்டாட்டத்தில் இருந்ததில்லை.பள்ளியில் எங்கள் 25ஆவது திருமண தினம் என்று கூறி,வம்படியாக பிற ஆசிரியைகள் என்னிடம் இனிப்பு காரம் வாங்க வைத்து விட்டார்கள்.நானும் நட்பு நிலையில் இந்த சாக்கில் சாப்பிடட்டும் என்று சொல்லியே வாங்கிக் கொடுத்தேன் என் மகிழ்ச்சி எல்லாம் பேப்பர் valuvation சென்று வந்த பணத்தில் பிள்ளைகளுக்கு உடை,சிறிய அளவில் ஆபரணங்கள்,தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பதில் தான்.பணம் போதாது என்றால் என் கணவரிடம் வாதடியாவது கேட்டு அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டால் ரொம்பப் பெருமையாக இருக்கும் அவரும் பிள்ளைகள் என்றால் பெரும் பாலும் கொடுத்து விடுவார்.இதைத் தாண்டி தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்கு ஏதும் இல்லை.அப்படி யாரும் மகிழ்விக்க நினைத்தால் சங்கடப்பட வேண்டியிருக்குமோ என்னவோ?மகிழ்ச்சிக்குப் பதில் சங்கடத்தை வாங்குவது கொடுமை அல்லவா?

1 comment:

  1. புரிந்தது அம்மா புரிந்தது :)

    ReplyDelete