Wednesday, 6 February 2013

balakumaranin UDAYARm andanarkalin en pazaya ninaivukalum.

பாலகுமரனின்  உடையார் 4பாகங்களைப் படித்து முடித்து விட்டேன்.அவற்றுள் பரவலாக அந்தணர்கள் குறித்த பல நிகழ்வுகள் வருகின்றன.அவற்றைப் படிக்கும் பொழுது என் சிறிய வயது நினைவுகள்....எங்கள் ஊரில் அக்ரஹாரம் இருந்தது.அந்தத் தெருவில் ஒரு 30,40குடும்பங்களும் ,20வீடுகளும் இருந்தன.மிக அமைதியாக பெயருக் கேற்றபடி இருக்கும்.வாசலில் செம்மண் கோலம்,நீளமான வீடுகள்,அவரவர் வசதிக் கேற்ற வகையில் உள் குடித்தனங்கள்,தனிவீடுகள்,ஒருசில அரசு அலுவலர்கள் (2,3,பெண்களும் அரசாங்க வேலை பார்த்தார்கள்) என்று அந்தத் தெருவுக்கே உரிய அந்தஸ்துடன் இருக்கும்.(இன்று பெயர் மட்டும்தான் இருக்கிறது.முஸ்லிம்கள் நிறைய பேர்கள் வீடுகளை remodel செய்து வசித்துக் கொண்டிருக் கிறார்கள்.அது வேறு விசயம்)என்  வகுப்பில் படித்தவர்கள் பரவலாக இருந்தனர்.அவர்களுடன் நாங்கள் வீட்டிற்குள் போக அனுமதிக்க மாட்டார்கள்.நாங்கள் சூத்திரவாளாம்.(அவர்கள் மொழியில் என்ன பொருளோ?)பிறகு ,அவர்கள் பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முற்றம் போன்ற இடத்தில் குளித்து உடை மாற்றினால் தான் உள்ளே அனுமதிப்பார்கள்.நவராத்திரி நேரத்தில் கொலு வைத்திருப் பார்களே!சிறுவர்,சிறுமி களாகிய நாங்கள் வெளியில் நின்றுதான்,ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு வருவோம்.எங்கள் வீடுகளில் கொலுவெல்லாம் வைப்பது பழக்கம் இல்லையே!அதுவுமல்லாமல் எங்களுக்கு ஒரு entertainment ம் கூட!அப்புறம் ஆற்றுக்குக் குளிக்கப் போகும் பொழுது,குளித்து விட்டுவரும் சில வயதான முக்காடிட்ட பாட்டிகள்,'தள்ளிக் கோடி' என்று எச்சரிக்கை ஒலியுடன் வருவார்கள்.குளிக்காத நாங்கள் அவர்கள் மேல் லேசாகப் பட்டு விட்டாலும் தீட்டாம்.இன்னும் பழைய காலத்தில் அவர்கள் இருக்கும் தெருவில் செருப்போ,மேல் சட்டையோ போட்டுக் கொண்டு போகக் கூடாதாம்.சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.எங்கள் ஊரின் taluk கத் தலை நகரில் ஒரு பஸ் கம்பெனி இருந்தது.அதில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பிற இனத்தவர் ஆகவும்,இருக்கையில் அமர்ந்து கணக்குகளைப் பார்ப்பவர்கள் அவர்களாகவும் இருப்பார்கள் என்றும்,கல்லூரியில் இரு பானைகளில் குடிநீர் வைத்திருப் பார்கள் என்று தன் நேரடி அனுபவமாக,என் முதுகலை வகுப்பு ஆசிரியரால் சொல்லக் கேட்டிருக்கிறோமே!அது மட்டுமல்ல.எங்கள் அப்பா எங்களை சிறு வயதில் காபி கிளப் க்கு அழைத்து செல்லும் பொழுது,'இது பிராமிணர்கள் சாப்பிடும் இடம்'என்று எழுதி இருப்பதைப் பார்த்து நாங்கள் வேறு மாதிரியாக உச்சரித்து சிரிப்போம்.பாலகுமாரன்,தன் நாவலில் முன் குடுமி வைத்த அந்தணர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்.கேரளா வுக்குச் சென்றால் அவர்களின் பழம் சரித்திரக் கதையைக் கூறுவார்களோ,என்னமோ?என் பையன் புலியூர்க் குறிச்சியில் தங்கிப் படித்தபோது ஒருசில,அவர்களின் குண அதிசயங்களைக் கூறியிருக்கிறான்.ஒரு முறை எங்கள் ஊரில் ஒரு மாட்டு வண்டி ஊர்வலம் நடந்தது.அதில் ராமர்கடவுள் போன்று வேறு சில கடவுளர்களின் வேடமிட்டு கழுத்தில் செருப்பு மாலையுடன் சென்றனர்.விவரம் புரியாத வயதில் எனக்கு,அது இனம் புரியாத உணர்வாக இருந்தது.இன்று காலம் எத்தனை மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது! ஒன்றை சொல்லியாக வேண்டுமே! நான் P.G.படிக்கும் பொழுது என்னுடன் படித்த இன்னொரு பெண்.அவளது வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிடவெல்லாம் செய்திருக்கிறேன்.அவளும் எங்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறாள்.ஆனால் அவர்கள் வசித்தது ஒரு ஒண்டுக் குடித்தனம்.

No comments:

Post a Comment