பண்ணையாரும் பத்மினியும் குறும் படத்தை சினிமா ஆக்கப் போகிறார்களாம்.அது என்னபடம்?!எங்கள் வீட்டில் இருக்குதே ஒரு பியட்.மாடல் M D O 8064.அதன் வருடத்தை சொல்லத் தேவை இல்லை.அந்த காருக்கு ஹீரோ என் கணவர்.என் கணவருக்கு heroine,தர்மபத்தினி எல்லாமே அந்தக் கார்தான்.இப்படிச் சொல்றதுனாலே புதுக் காரா அப்போ வாங்கி இருப்பாரோ என்று பெருமையா நினைத்தீங்கன்னா நான் பொறுப் பில்லை.அந்தக் கார் owner 30 வருஷம் அதை ஓட்டி வெறுத்துப் போய் வித்துட்டுப் போனதை இவர் ஒரு புரோக்கர் மூலமா வாங்கிகிட்டு வந்து பெருமை பீத்திக் கிட்டார்.
அப்போ என்பெண் 11ஆம்வகுப்பும் ,பையன் 8ஆம் வகுப்பும் படிச்சிட்டு இருந்ததாலே அவங்க ஒண்ணும் பேசலை.அப்பாவை எதிர்த்துப் பேசும் அளவுக்குஅவங்க இல்லை.எனக்கு அந்தக் காரைப் பார்த்து வெறுப்பு ஒரு பக்கம்,இந்த மனிதர் இப்படித் தான் தோன்றித் தனமாகச்செயல் படுகிறாரே என்ற கோபம் ஒருபக்கம்.அது கிடக்க.அந்தக் காரில் எங்கள் குடும்பம் போனது என்பதை விட நாங்கள் நால்வரும் அந்தக் காரைத் தள்ளி இருப்பது தான் அதிகம்.
இன்றளவும் அந்தக் காரைக் குறித்து கேலி பேசாதவர்கள் கிடையாது.எங்கள் தெருவில் வயதான முஸ்லிம் அன்பர் ஒருவர் அந்தக் காருடன் போராடுகின்ற எங்களிடம் அனுதாபப் பட்டு ,இந்தக் காரை விற்று விடுங்கள் சார்.இதுபோன்றொரு பழைய மாடல் க்கு இப்படிச் செலவு செய்கிறீர்களே என்று கூறிப் பார்த்தார்.ஊஹூம்....அவரின் காலம் முடிந்து அவர்தான் இறந்து விட்டார்.பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி கை,கால் முடியாதவர்.அவரும்,சார் ஏன் இந்தக் காரை வைத்துக் கொண்டு சிரமப்பட வேண்டும்?என்று கூறி என் கணவரின் கோபத்திற்கு ஆளானது தான் மிச்சம்.
ஒரு முறைபழைய பேப்பர் காரர்,வழக்கமாக வருபவர் ,இந்தக்காரை 16000ரூபாய்க்கு நான் எடுத்துக் கொள்கிறேன்.அதில் உள்ள parts அந்த மதிப்புக்குத் தான் இருக்கும்.என்று யதார்த்தமாகக் கூறினார்.அவ்வளவு திட்டு அந்த பேப்பர் காரருக்கு.அதிலிருந்து என் கணவர் இல்லாத நேரம் பார்த்துத்தான் பழைய பேப்பர் காரரையே கூப்பிடுவது.இந்தக்காரை எடுத்துக் கொண்டு தான் ஏர்போர்ட் க்குப் போக வேண்டுமா என்று அதை ரிப்பேர் பார்க்கும் mechcanic கூட ஒரு முறை திட்டி அனுப்பி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரைக் கூட எவ்வளவு வெறுப்பேற்றி இருக்கிறது என்று.
பழைய மாடல் கார் exhibition வைப்பார்களே அதற்கு அனுப்பலாமோ?ஆனால் என் கணவர் அதையும் ஒத்துக் கொள்ளமாட்டார்.இப்பொழுதும் இதை 2லட்சத்துக்குக் கேட்கிறார்கள் கேக்குறாங்க ,குடுத்துடவா என்று மிரட்டுவார்.நான் பேசாமல் இருந்துடுவேன்.ஏன்னா வேற ஏதாவது விளைவு அல்லது என் பெண் புதியதாக வாங்கிய ஸ்விப்ட் பெட்ரோல் ல் காஸ் பயன் படுத்தி ஓட்ட ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?இப்படிஎல்லாம் சொல்வதனால் பியட் எதற்கும் பயன்பட வில்லையோ என்று ஐயுற வேண்டாம்.இதற்கு நான் விளக்கம் சொல்வதை விட அதில் நாங்கள் பயணிக்கும் பொழுது என் கணவரின் முகத்துப் பெருமிதத்தை பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.என் பையன் ஓட்ட அவர் பக்கத்தில் உட்கார்ந்து வர...தேர் பவனி தோற்றுப் போகும்.ரொம்ப ஸ்பீட் போகாதாமில்லே.என் பையன்தான் சொன்னான்.வேற எதாவது கார்லே போகக் கூடிய சந்தர்ப் பத்தில், நல்ல காராகவே இருந்தாலும் , நம்ம பியட் மாதிரி வருமா என்று புளகாங்கிதப்பட்டுக் கொள்ளும் என் கணவரின் பெருமிதமான மனம்...கீழ் வீட்டில் குடி வந்திருக்கும் இளைஞர் களிடம்.இந்தக் காரில்தான் என் பெண்ணும் பையனும் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார்கள் என்று என் பங்குக்கு நான் பெருமைப் பட அவர்கள் இதில் வேறு என்ன செய்ய முடியும் என்று ஒரே வார்த்தையில் பாராட்டினார்களே!
வாசலில் தளிர் வரும் முருங்கைக்கு ஒரு பக்க மறைவாக, மாடு வாய் வைக்காமல் இருக்க ஒரு பக்கக் காவலாய் கண கம்பீரமாய் நின்று கொண்டிருக்கும் எங்கள் பியட் இன் பெருமையைப் படமாக எடுக்க பார்ட் 1, பார்ட் 2 என்றல்லவா எடுக்க வேண்டும்.
Very humorous. உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமை! வாழ்த்துக்கள் :)
ReplyDelete@Ganesh: Do you remember, You took us a round in this Super FIAT during our 10th std.
ReplyDelete- Priya